×

கொளந்தானூர் பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், ஜூன்13: கரூர் நகராட்சிக்குட்பட்ட கொளந்தாதனூர் பகுதியை சுற்றிலும் சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்திட வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட தெரசா கார்னர் பகுதியில் இருந்து பசுபதிபாளையம் செல்லும் வழியில் கொளந்தானூர் பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு அடுத்தாக அம்மன் நகர் பகுதி உள்ளது. இந்த அம்மன் நகர் பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் வரிசைக் கிரமமாக உள்ளது. ஆனால், இந்த பகுதியில் எந்த தெருவிலும் சாக்கடை வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, தங்களின் வீடுகளின் முன்பாகவே பள்ளம் தோண்டி கழிவுகளை வெளியேற்றும் நிலையில் உள்ளனர். ஒரு சிலர் சொந்தமாக வடிகால் ஏற்படுத்திக் கொணடாலும் பெரும்பாலான மக்களுக்கு இந்த வசதி இல்லாமல் உள்ளது. மேலும், அம்மன் நகர் சாலையும் குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது.தங்கள் பகுதிக்கு சாக்கடை வடிகால் வசதி கொண்டு வர வேண்டும் என பலமுறை இந்த பகுதியினர் கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. மேலும், அம்மன் நகரின் பின்புறம்தான் தற்போது அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடந்து முடிவடைந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளன. கல்லூரி துவங்கியதும், அதிகளவு இந்த பகுதியில் வாகன போக்குவரத்தும், மாணவர்களும் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கொளந்தானூர் பகுதியில் உள்ள அம்மன் நகரில் சாக்கடை வடிகால் வசதி, சாலை தரம் உயர்த்தல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : drainage facilities ,area ,Kolandanoor ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...