×

மஞ்சக்கொம்பை சாலை சந்திப்பில் அபாயகரமான வளைவு அகற்றம்

ஊட்டி, ஜூன் 13:  கைகாட்டி - மஞ்சக்கொம்பை சந்திப்பு பகுதியில் அபாயகரமாக இருந்த வளைவு அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலைகளில் பெரும்பாலான இடங்களில் அபாயகரமான வளைவுகள், கொண்டை ஊசி வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அபாயகரமான வளைவுகளில் வாகனங்கள் செல்லும் போது, எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், ஒன்றுக்கொன்று மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஊட்டி - மஞ்சூர் சாலையில் காத்தாடிமட்டம் முதல் மஞ்சூர் வரை பல்வேறு இடங்களில் இது போன்று அபாயகரமான வளைவுகள் உள்ளன. குறிப்பாக, கைகாட்டி - மஞ்சக்கொம்பை சந்திப்பு பகுதியில் அபாயகரமான வளைவு இருந்தது. மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் என்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இச்சாலையில் தற்போது விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைகாட்டி - மஞ்சக்கொம்பை சாலை சந்திப்பில் இருந்த அபாயகரமான வளைவு முற்றிலும் அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் விபத்து ஏற்படுவது இனி குறைய வாய்ப்புள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Manjokambai Road Junction ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...