×

ஆந்திராவில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் கடத்திய 36 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு,  ஜூன் 13:  ஆந்திராவில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் கடத்தி வந்த 36 கிலோ  கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, பெண் உட்பட 4 பேர் கைது  செய்யப்பட்டனர். ஆந்திரா மாநிலத்தில் இருந்து கோவை மார்க்கமாக  செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சாவை கடத்தி வருவதாக கோவை போதை  பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்,  திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று ஆலப்புழா  எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது, அந்த ரயிலின்  பொதுப்பேட்டியில் சந்தேகப்படும்படியாக 4பேர், சிறிய ரக பண்டல்களை கொண்டு  செல்வது தெரியவந்தது. போலீசார் அவர்களை கண்காணித்து  வந்தனர். ரயில் ஈரோடு சந்திப்பை அடைந்ததும், அந்த நபர்கள் பண்டல்களுடன்  இறங்கி செல்ல முயன்றனர். இதைத்தொடர்ந்து அந்த 4 பேரையும் மடக்கி பிடித்து,  அவர்களிடம் இருந்த பண்டல்களை சோதனை செய்தனர்.அப்போது, அதில் கஞ்சா பொட்டலம்  இருந்தது தெரியவந்தது. 4 பேரையும் பிடித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார்  நடத்திய விசாரணையில், அவர்கள் ஆந்திரா மாநிலம் சாம்பல் கோட் பகுதியை  சேர்ந்த வீரப்பத்திர ராவ் (32), வெங்கட் ராமன் (43), நாமக்கல் மாவட்டம்  குமாராபளையத்தை சேர்ந்த முருகேசன் (41), முருகேசனின் அக்கா பள்ளிபாளையத்தை  சேர்ந்த சாந்தி (49) என தெரியவந்தது. இவர்கள் ஆந்திரா மாநிலம்  டாடா நகர் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி ஈரோடு, திருப்பூர் பகுதிக்கு  விற்பனைக்கு எடுத்து செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. 4 பேரையும் போலீசார்  கைது செய்ததனர். அவர்களிடம் இருந்த 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Andhra ,Erode ,
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்