×

50 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மணல் திட்டு, முட்புதர்களான ஆத்தூர் குளம் வாழை, வெற்றிலை கொடிக்கால்கள் கருகும் அபாயம்

ஏரல், ஜூன் 13: ஏரல் அருகே கடந்த 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத ஆத்தூர் குளம், புதர்மண்டி தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் வாழை, வெற்றிலை கொடிக்கால்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் விரக்தியடைந்து உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆத்தூர் குளம், 547 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தில் உள்ள 14 பாசன மடைகள் மூலம் 2 ஆயிரத்து 220 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. இதில் விவசாயிகள் நெல், வாழை மற்றும் வெற்றிலை கொடிக்கால்கள் பயிர் செய்துள்ளனர். இக்குளத்தை நம்பி ஆத்தூர், கீரனூர், கீழ கீரனூர், தலைவன்வடலி, ஆவரையூர், தளப்பண்ணை, புதுநகர், செலவன்புதியவன், குமாரபண்ணை, சேர்ந்தபூமங்கலம், கைலாசபுரம் உட்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் நடந்து வருகிறது.

ஆத்தூர் குளத்திற்கு வைகுண்டம் தென்கால் வாய்க்கால் மூலம் தண்ணீர் வருகிறது. 14 அடி ஆழமுள்ள இந்த குளத்தில், தற்போது மணல் திட்டுகள் ஏற்பட்டு 5 அடிக்கு கூட தண்ணீர் கூட தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குளம் முழுவதும் முட்செடிகள் மற்றும் காட்டுச்செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளதால் ஆத்தூர் குளம் இருந்த இடம் தெரியாமல் காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால் மழைக் காலத்தில் இந்த குளத்திற்கு வரும் தண்ணீரை சேமித்து வைக்க முடிவதில்லை. மேலும் இந்த குளத்தை நம்பி மூன்று போக விளைச்சல் கண்ட இப்பகுதியில், தற்போது ஒருபோக விளைச்சல் காண்பதற்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுகிறது.

தற்போது குளம், தண்ணீரின்றி வறண்டு போய் உள்ளதால் இக்குளத்து தண்ணீரை நம்பி விவசாயம் செய்துள்ள பல லட்சம் வாழை மற்றும் வெற்றிலை கொடிக்கால்கள் கருகி வருகிறது. இதனால் கருகி வரும் வாழை, வெற்றிலை கொடிக்கால்களை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீருக்காக தங்களது தோட்டங்களில் போர் போட்டு பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். இப்படி ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக விவசாயிகள் செலவு செய்து வருவதால் விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் விரக்தியடைந்த நிலையில் உள்ளனர். எனவே வருங்காலத்திலாவது இந்த குளத்தை தூர்வாரி அதிக அளவு தண்ணீரை சேமித்து வைத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போர்க்கால அடிப்படையில்
குளத்தை தூர்வார வேண்டும்

திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர், விவசாயி மாணிக்கவாசகம் கூறுகையில், ஆத்தூர் குளம் 50 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாததால் குளத்தில் மணல் திட்டுகளும், முட்செடிகளும், காட்டுச்செடிகளும் ஆக்கிரமித்து குளம் இருந்த இடம் தெரியாமல் உள்ளது. இதனால் குளத்தில் அதிகளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்துள்ள வாழை, வெற்றிலை பயிர்கள் அனைத்தும் கருகி வருகிறது. குளம் வறண்டு போய் உள்ளதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி தண்ணீரும் குறைந்து கொண்டே செல்கிறது. இந்த குளத்தினை தூர்வார வேண்டுமென்பது விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கையாகும். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனியாவது காலம் தாழ்த்தாமல் மழைக்காலம் துவங்கும் முன்பு விவசாயிகளின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் ஆத்தூர் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags : groves ,
× RELATED கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில்...