×

‘வாயு’ குஜராத்தை நோக்கி நகர்ந்ததால் குறைந்தது சாரல் பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்வு

வி.கே.புரம், ஜூன் 13:  அரபிக்கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ‘வாயு’ புயலாக மாறியது. இதையடுத்து நேற்றுமுன்தினம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, திருச்சூர் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 4 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தாக்கத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தென்காசி, குற்றாலம், பாபநாசம், புளியங்குடி, சிவகிரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இடைவிடாத சாரல் மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலான மழை இருந்தது. கன்னியாகுமரியில் பலத்த மழை பெய்தது. இடைவிடாத சாரல் மழையால் குற்றாலத்தில் நேற்றுமுன்தினம் முதல் சீசன் அபாரமாக துவங்கியது. மெயினருவியிலும், ஐந்தருவியிலும் தண்ணீர் விழத் துவங்கியது. ஆனால் புலியருவியிலும், பழைய குற்றாலத்தில் இன்னும் தண்ணீர் விழவில்லை. இந்நிலையில் அரபிக்கடலில் உருவான வாயு புயல் குஜராத்தை நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் குறைந்தது. கடந்த 2 நாட்களாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்த நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து 2555 கனஅடியிலிருந்து 559 அடியாக குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2.40 அடியே உயர்ந்து 33.40 அடியாக உள்ளது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 51.18 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 58.50 அடியாகவும் நீடிக்கிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 369 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து 275 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடனாநதி, ராமநதி ஆகிய அணைகளின் நீர்மட்டம் 25 அடியாகவும், குண்டாறு 11.62 அடியாகவும், கருப்பாநதி 24.61 அடியாகவும், வடக்கு பச்சையாறு 2.75 அடியாகவும், நம்பியாறு 14.41 அடியாகவும், கொடுமுடியாறு 10 அடியாகவும் நீடிக்கிறது. கடனாநதியில் உள்ளே வரும் 6 அடி தண்ணீரும், ராமநதியில் 2 அடி தண்ணீரும், கருப்பாநதியில் 2 அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அடவிநயினார் அணையில் 22 அடியாக இருந்த நீர்மட்டம் 27 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 17 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் வரை இருப்பதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

மழை அளவு
நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): பாபநாசம்- 5, கடனா நதி- 2, கருப்பாநதி-4.5, குண்டாறு-14, அடவிநயினார்- 16, அம்பை-1, ஆய்க்குடி-2.4, நாங்குநேரி- 7 ராதாபுரம்-23, செங்கோட்டை- 12 மி.மீ. என மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags : Gujarat ,Papanasam ,
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...