5 வருடமாக கிடப்பில் சேவை மைய கட்டிடம் அரசு நிதி வீணடிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

சாயல்குடி, ஜூன் 12: கீழச்சிறுபோது ஊராட்சி சேவை மைய கட்டிடம் முழுமையடையாமல் 5 வருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், நூறு நாள் பணியாளர்கள் சிரமப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். கடலாடி ஒன்றியம், கீழச்சிறுபோது ஊராட்சியில் 2014-2015ம் ஆண்டுகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சேவை மையக்கட்டிடம் கட்டப்பட்டது. ரூ.12.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இக்கட்டிடம் கட்டப்பட்டு 5 வருடங்கள் ஆகியும் பணி நிறைவடையாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இக்கட்டிடத்தை பயன்படுத்த முடியாமல் நூறுநாள் பணியாளர்கள், கிராம இ.சேவை மையம் செயல்படாததால் தேவையான சான்றுகளை பெற முடியாமல் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.இதுகுறித்து கீழச்சிறுபோது கிராமமக்கள் கூறும்போது, கடந்த 2014ம் ஆண்டு சேவை மையக்கட்டிடம் கட்டப்பட்டது. ஒரு வருடத்தில் கட்டிடம் கட்டு பணி நடந்து, கட்டிடத்திற்கு சென்ட்ரிங் போடப்பட்டது. பிறகு அக்கட்டிடத்தை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனை நூறு நாள் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல், வருகை பதிவேடு பராமரித்தல், ஆவணங்களை தணிக்கை செய்தல் போன்ற பணிகளுக்கும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் நிறுவன இ.சேவை மையம் மூலம் பொதுமக்களுக்கு தேவைப்படும் கல்விச்சான்று.

அரசு வேலை மற்றும் அரசின் திட்ட உதவிகளை பெற தேவையான சான்றுகளை பெறுதல், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கணினி சார்ந்த பணிகளின் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டும் பணி முழுமை அடையாததால், கட்டிடம் சேதமடைந்து கிடக்கிறது. அரசு பணமும் விரயமாக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் சிலர் மது அருந்துதல், சீட்டு விளையாடுதல் போன்ற சமூக விரோத செயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். கட்டிடத்தை முழுமையாக கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி பலமுறை கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த வருடம் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தோம், முன்னாள் கலெக்டர் நடராஜன் வந்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது உடனடியாக கட்டிடத்தை கட்டி முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு கிராம மக்கள் முன்னிலையில் உத்திரவிட்டார்.

அதன் பிறகு ஒரு வருடம் ஆகியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நூறு நாள் வேலை சம்பளத்தை வெயிலில் நின்று வாங்கும் நிலை உள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அரசு உதவி பெற தேவையாக சான்றுகளையும் பெற முடியவில்லை. எனவே கலெக்டர் வீரராகராவ் கட்டிடத்தை கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : service center building ,state ,
× RELATED கமுதி அருகே திமுகவில் இணைந்த 200 அதிமுகவினர்