சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் மனுக்களை பதிய நீண்ட நேரம் காத்திருப்பு முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதி

சிவகங்கை, ஜூன் 12:  சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், நடக்கும் குறைதீர் கூட்டத்தில்  மனு அளிப்பதற்கு முன், மனுக்களை பதிய நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க தாலுகா  அலுவலகங்கள், ஒன்றிய தலைநகரங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி  அலுவலகங்கள் உள்ளன. இதுதவிர அவ்வப்போது கிராமங்களிலும் முகாம்கள்  நடத்தப்படுகின்றன. இம்முகாம்களில் முதியோர், விதவை உதவித்தொகை, ரேஷன் கார்டு  வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, பிரச்னை தீர்க்க நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பல்வேறு முகாம்களில்  பொதுமக்களுடைய குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும்,  வாரந்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்  கூட்டத்திற்கு ஏராளமான கிராமத்தினர் வந்து மனு அளிக்கின்றனர். காலை  10 மணியிலிருந்து மதியம் வரை சுமார் 300க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள்  பெறப்படுகின்றன. இதில் குடிநீர், சாலை வசதி, அரசு மற்றும் தனியார் இடம்  ஆக்கிரமிப்பு, கால்வாய் ஆக்கிரமிப்பு, சுடுகாடு வசதி, முதியோர், விதவை  உதவித்தொகை உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளுடன் பொதுமக்கள் மனு அளிக்கின்றனர்.

கலெக்டரிடம் மனுக்களை அளிக்கும் முன், அவைகளை பதிவு செய்து ரசீது பெற வேண்டும்.  இவ்வாறு பதிவு செய்ய சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் கியூவில்  காத்திருக்க வேண்டும். காற்றோட்டம் இல்லாத அலுவலகத்தில்  நீண்ட நேரம் காத்திருப்பதால் முதியோர் மற்றும் உடல்  நலிவடைந்தோர், மாற்றுத்திறனாளிகள் களைப்படைந்து விடுகின்றனர். அலுவலக  வளாகத்தில் இருந்து கட்டிடத்திற்கு வெளியில் வரை நீண்ட க்யூவில்  காத்திருக்கின்றனர். பின்னர் கலெக்டரிம் மனுவை அளிக்க மீண்டும் ஒரு மணி  நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும். இவ்வாறு நீண்டநேரம் நிற்பவர்கள்  கடும் அவதிப்படுகின்றனர். எனவே, மனுவை பதிவு செய்வதற்கு கூடுதல்  ஆட்கள் நியமனம் செய்யவேண்டும். அல்லது மனு கொடுப்பதற்காக அமர்ந்திருக்கும்  அரங்கத்திலேய மனுவை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என  வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து மனுதாரர்கள் சிலர் கூறியதாவது: குறைதீர் கூட்டத்தில்  அளிக்கப்படும் மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் ஏற்கனவே எந்த அலுவலகத்திலும்  தீர்வு கிடைக்காமல், கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிறது. தீர்வு கிடைக்காமல் மீண்டும், மீண்டும் வருவதால்  அதிகப்படியான கூட்டம் காணப்படுகிறது. பொதுமக்களை மேலும் அவதிப்படுத்தி  காத்திருக்க செய்யாமல் மனு பதிவு, மனுவை பெறுவது உள்ளிட்டவற்றை  எளிமைப்படுத்த வேண்டும்’ என்றனர்.

Tags : Elders ,collector ,Sivagangai ,
× RELATED கீழடி அருகே கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு