×

சிவகங்கையில் ரயில் நிலையத்தில் டிக்கெட் பதிவிற்கு கால்கடுக்க காத்திருக்கும் பயணிகள் ஒரு கவுன்ட்டர் மூடப்பட்டதால் அவதி

சிவகங்கை, ஜூன் 12: சிவகங்கை ரயில்வே ஸ்டேசனில் டிக்கெட் எடுக்க கால்கடுக்க காத்திருக்க வேண்டியிருப்பதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை ரயில்வே ஸ்டேசன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இவ்வழியே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. ஸ்டேசனில் பழைய கட்டிடத்தோடு சில ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டது. சிவகங்கையிலிருந்து சென்னை, திருச்சி, மன்னார்குடி, விருதுநகர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி, புவனேஸ்வர், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சுமார் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வழியே செல்கின்றன. திருச்சி முதல் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் ரயில்களில் புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், சிவகங்கை மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.
இங்கு முந்தைய கட்டிடத்தில் ஒரு டிக்கெட் கவுண்ட்டர், புதிய கட்டிடத்தில் ஒரு டிக்கெட் கவுண்டர் இருந்தது. முந்தைய கட்டிடத்தில் இருந்த டிக்கெட் கவுண்ட்டர் தட்கல் டிக்கெட் மட்டும் ரிசர்வ் செய்யும் வகையில் திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தட்கல் கவுண்ட்டர் மூடப்பட்டு, புதிய கட்டிடத்தில் இருக்கும் கவுண்ட்டரில் மட்டுமே அனைத்து டிக்கெட் பதிவுகளும் நடந்து வருகின்றன. தட்கல், ரிசர்வேஷன், சாதாரண ரயில் டிக்கெட் என அனைத்தும் ஒரே கவுண்ட்டரில் நடப்பதால் நீண்ட நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டிக்கெட் கவுண்ட்டர் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் திறக்கப்பட்டிருக்கும். இதில் காலை 10 மணி முதல் 11 வரை தட்கல் டிக்கெட் பதிவு செய்யப்படும். தட்கல் டிக்கெட்டிற்கு இன்னும் அதிக கூட்டம் காணப்படுவதால் இந்த நேரத்தில் பிற டிக்கெட்டுகள் எடுப்பதற்கு கடும் சிரமப்பட வேண்டியிருக்கும். எனவே மீண்டும் இரண்டு கவுண்ட்டர்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயணி கண்ணன் கூறியதாவது: ரயில் வரும் நேரத்திற்கு சில நிமிடத்திற்கு முன் ஏராளமான பயணிகள் வருவர். அவ்வாறு வரும்போது கூட்டம் காணப்பட்டால் டிக்கெட் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு அவசர கோலத்தில் ரயிலில் ஏற வேண்டியிருக்கிறது. டிக்கெட் பதிவு செய்தலும் மிக மெதுவாக நடக்கிறது. இதனால் அனைவருமே நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே இரண்டு டிக்கெட் கவுண்ட்டர் திறக்க வேண்டும். வேகமாக டிக்கெட் பதிவுப்பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags : Passengers ,railway station ,Sivaganga ,shutdown ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...