×

தொட்டிலில் ஒண்ணு...கட்டிலில் ஒண்ணு... 20 ஆண்டுகளாக பணிபுரிகிறோம் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை வேண்டும்

தேனி, ஜூன் 12: உழவர் சந்தைகளில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரியும் பாதுகாவலர்களை பணிநிரந்தரப்படுத்தக் கோரி பாதுகாவலர்கள் தேனி கலெக்டரிடம் மனு அளித்தனர். திமுக தலைமையிலான அரசு கடந்த 1996-2001ம் ஆண்டுகால ஆட்சியின்போது தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகளை திறந்தது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் காய்கறிகளை எவ்வித இடைத்தரகர் இன்றி நேரடியாக உழவர்சந்தைக்கு கொண்டு வந்து விற்கும் இத்திட்டம் இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேனியில் 100வது உழவர் சந்தை கடந்த 1999ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதேபோல தேனிமாவட்டத்தில் தேனி, கம்பம், போடி, பெரியகுளம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைகளில் நாளொன்றுக்கு மூன்று பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப காலத்தில் பாதுகாவலராக நியமிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.1500 மட்டும் சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.5 ஆயிரம் மாதச்சம்பளமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் பாதுகாவலர்களாக பணிபுரிவோர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து தங்கள் கோரிக்கையை மனுவாக கலெக்டர் பல்லவிபல்தேவிடம் அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது : உழவர் சந்தையில் பாதுகாவலர்களாக கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு உழவர்சந்தைக்கும் மூன்று காவலர்கள் உள்ளனர். எட்டு மணி நேரத்திற்கு ஒரு காவலர் வீதம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறோம். தினசரி வருகைபதிவேட்டில் பணிபுரிந்தமைக்கான விபரத்தை கையொப்பமிட்டு வருகிறோம். உழவர்சந்தை ஆரம்பத்தில் மாதம் ரூ.1500ம், தற்போது ரூ.5 ஆயிரமும் சம்பளம் தரப்படுகிறது. இந்த சம்பளம் பாதுகாப்பு நிறுவனங்கள் மூலம் வழங்குவதால் மாதந்தோறும் பாதுகாப்பு நிறுவனங்கள்  சம்பளத்தில் ரூ.500 கமிஷனாக பிடித்தம் செய்து மாதம் ரூ. 4 ஆயிரத்து 500 மட்டும் வழங்குகின்றனர். இச்சம்பளத்தை பெற்றுக்கொண்டு குடும்பம் நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. எனவே தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், மேலும் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை