×

அடிப்படை வசதி இல்லாததால் விளையாட்டில் பின்தங்கும் அரசு பள்ளி மாணவர்கள்

திருப்பூர்,  ஜூன் 12:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சி பள்ளிகளில்,  போதுமான அடிப்படை வசதி இல்லாததால், விளையாட்டில் பின்தங்கும் நிலை  ஏற்பட்டுள்ளது. மாணவர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து  பள்ளிகளிலும் விளையாட்டு மைதானம் அமைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை  உள்ளது. விளையாட்டுக்காக அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி வகுப்பு  செயல்படுத்தப்படுகிறது. விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக, பள்ளிகளுக்கு  ஆண்டுதோறும் பள்ளி கல்வித்துறை நிதி ஒதுக்குகிறது. கல்வித்துறை வழங்கும்  நிதி, விளையாட்டு உபகரணங்கள் வாங்க முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. வேறு  தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் வாலிபால்,  புட்பால், ஸ்கிப்பிங் போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்கி வைக்கின்றனர்.  நாளடைவில் பழுதடைந்தாலும், மாற்றிக்கொடுப்பது இல்லை.

 மேலும் ஆண்டுக்கணக்கில்  பயன்படுத்தப்பட்ட பழுதடைந்த உபகரணங்களை வைத்தே மாணவர்கள் விளையாட  வேண்டியுள்ளது. விளையாட்டுக்கு மைதானம் அடித்தளமாக உள்ள நிலையில்,  திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட பெரும்பாலான ஆரம்ப பள்ளிகளில் போதிய  மைதானங்கள் இல்லை. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இருக்கும்  மைதானங்களும், எவ்வித பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து கிடக்கின்றன.  மழைக்காலங்களில் பள்ளி மைதானங்களில் தேங்கும் மழைநீர் வெளியேற்றப்படுவது  இல்லை. வாலிபால், புட்பால் போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற முடியாமல்  மாணவர்கள் தவிக்கின்றனர். பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக  ஆசிரியர்கள் உடற்கல்வி வகுப்புக்கு மாணவர்களை அனுப்புவது இல்லை. பள்ளி  முடிந்த பின்னரே விளையாட முடியும் என்று கூறுவதால், மாணவர்களிடம் விளையாட்டு  ஆர்வம் குறைந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், அரசு பள்ளி மாணவர்கள்  விளையாட்டு போட்டிகளில் பங்குபெறுவதை தவிர்க்கின்றனர். இதனால்  ஊக்குவிப்பும், பயிற்சி களமும் இல்லாமல், மாணவர்கள் போட்டிகளில் தோல்வியடையும் அவல  நிலை ஏற்படுகிறது. பள்ளிகளில் வெறும் கல்வியை மட்டுமே போதிப்பதால்,  மாணவர்களிடம் மன திடமும் குறைகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 20  சதவீதத்திற்கும் மேற்பட்ட அரசு, நகராட்சி பள்ளிகளில் விளையாட்டு மைதான  வசதி இல்லை என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே மாவட்ட  கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Government school students ,game ,facilities ,
× RELATED ரம்மி விளையாட்டில் ரூ.30 ஆயிரம் இழப்பு போலீஸ்காரர் தற்கொலை