திருப்பூர் அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

திருப்பூர், ஜூன் 12:அரசு துவக்க பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் அதிகளவில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கையினை ஏற்படுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், கண்டியன்கோவில் ஊராட்சிக்குட்பட்ட தாயம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய பள்ளி தலைமையாசிரியர் சாந்தி மற்றும் ஊர் பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து பாராட்டு தெரிவித்தார்.  இதையடுத்து கலெக்டர் பழனிசாமி கூறியதாவது:  தற்பொழுது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும், திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் முயற்சியால் நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதல் இடத்தினை பெற்றுத்தந்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

 மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் பயனாக நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டுமென்ற ஆர்வம் பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. அதன்படி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் கண்டியன்கோவில் ஊராட்சிக்குட்பட்ட தாயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கடந்த 1963ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 2016-2017ம் ஆண்டு ஒரு மாணவருடன் செயல்பட்டு வந்தது. இதனால் அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற சூழல் நிலவியது.  இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் படி முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஊர் பொதுமக்ளின் பெரும் முயற்சியால் 2017-2018ம் ஆண்டு 62 மாணவர்களும், 2018- 2019ம் கல்வியாண்டில் 46 மாணவ, மாணவியர்களும் கல்வி பயின்ற சூழலில், தற்போதைய கல்வியாண்டில் தாயம்பாளையத்திற்கு அருகாமையில் வேலம்பட்டி, காடையூர், அலகுமலை, பெருந்தொழுவு ஆகிய பகுதிகளில் தனியார் ஆங்கிலப்பள்ளிகளிலிருந்தும் இப்பள்ளியில் 39 மாணவர்கள் எல்கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளில் சேர்த்துள்ளனர். இப்பள்ளியின் தலைமையாசிரியர் ஊர் பெரியோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களின் முயற்சியினால் (2019-2020) சுமார் 107 மாணவ, மாணவியர்களுடன் இப்பள்ளி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

  மேலும், இப்பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கக்கூடிய மாணவ, மாணவியர்களை பள்ளிக்கு அழைத்து செல்லும் வகையில் வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.  இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Government school ,Tirupur ,
× RELATED கூடலூர் அருகே அரசு பள்ளியில் 25ம் ஆண்டு வெள்ளி விழா