சிவகாசி சிவன் கோயிலில் அன்னதானக் கூடம் அமைக்க வலியுறுத்தல்

சிவகாசி, ஜூன் 12: சிவகாசி சிவன்கோவிலில் அன்னதானக் கூடம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகாசியில் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற சிவன்கோயில் உள்ளது. இங்கு காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். நகரின் மையப்பகுதியில் கோயில் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், கோயிலில் துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, முருகன், பைரவர், நவகிரகங்கள் உள்ளதால், பெண்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். பிரதோஷம் போன்ற விசேஷ தினங்களில் சிவகாசி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கோயிலுக்கு வருவர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி 100 பக்தர்களுக்கு மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இது தவிர சமபந்தி அன்னதானமும் நடத்தப்படும். ஆனால், கோயிலில் அன்னதான கூடம் தனியாக அமைக்கப்படவில்லை. இதனால், கோயிலின் பிரதான நுழைவு வாயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால், பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல சிரமப்படுகின்றனர். அன்னதானம் வழங்கும்போது கோயிலின் பிரதான வாயில் அடைக்கப்படுகிறது. இதனால், கோவிலுக்கு வருவோர் அவதிப்படுகின்றனர்.

கோயிலில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது கோயிலில் புதிய கொடி மரம் நட்டப்பட்டு, கோயில் கொலுமண்டபம், கோவில் பிரகாரம், கோபுரங்களுக்கு வண்ணம் பூசப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் தெப்பம் பல லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. புனரமைப்பு பணிக்கு பின்னர், பக்தர்களின் வருகை தற்போது அதிகமாக உள்ளது. சிவன் கோவில் தெற்கு பகுதியில் உள்ள காலியிடத்தில் அன்னதான கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலைய துறையினர் தெரிவித்திருந்தனார். இதற்காக தெற்குப் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் காலி செய்யப்பட்டன. 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இங்கு அன்னதானக் கூடம் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது கோயிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு காசி விஸ்வநாதர், விசாலட்சுமி அம்மன் தினமும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். ஆனால், கோயில் முன்பு கழிவுநீர், குப்பைக் கழிவுகள் தேங்கி கிடப்பதால் சுகாதாரமற்ற நிலை உள்ளது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுகாதாரக் கேட்டால் அவதிப்படுகின்றனர்.

Tags : hall ,Annadanakkal ,Sivakasi Shiva Temple ,
× RELATED கட்டுமான பணிக்காக கட்டிய தொட்டி...