×

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் காலி

திண்டுக்கல், ஜூன் 12: வனவிலங்குகள்  தண்ணீர் தேடி ஊருக்குள் புகுவதை தடுக்கும் பொருட்டு வனப்பகுதிகளில் வைத்துள்ள தண்ணீர் தொட்டிகளில்  தண்ணீர் நிரப்ப வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  வனத்துறையினர் மெத்தனத்தால் வன விவசாயிகளின் விளை நிலங்கள்  பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். திண்டுக்கல்  மாவட்டத்தில் கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், சிறுமலை, தாண்டிக்குடி, பழநி  மலை, அய்யலுார் மலை, கரந்தமலை என மலைகளால் சூழப்பட்டுள்ளது.

இங்கு யானை,  காட்டுமாடு, காட்டு பன்றி, மயில், மான் முயல் உட்பட பல விலங்குகள்  வசிக்கின்றன. வன விலங்களுக்கு நோய் பராவமல் தடுக்க அவ்வப்போது தாது உப்பு  கட்டிகள் வனத்துறை மூலம் வைக்கப்படுகிறது. மேலும் வனவிலங்குகள் தண்ணீர்  தேடி ஊருக்குள் புகுவதை தடுக்க வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிகள் வனத்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு,  அவ்வப்போது தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. கடந்த சில மாதமாக தண்ணீர்  தொட்டிகளை கண்காணிக்க வனத்துறையினர் மறந்து விட்டனர். இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதையடுத்து யானை, காட்டு  மாடுகள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் மற்றும் அதற்கு தேவையான புல்,  பூண்டுகள் உட்பட உணவு கிடைக்காமல்  ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

தற்போது வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் மழை இல்லாததாலும், வனத்துறையினர் நிரப்பாததாலும் காய்ந்து கிடக்கிறது. வன விலங்குகள் ஊருக்குள் புகுவதால் விளைந்த பயிர்கள் சேதமாவதோடு, சில  நேரங்களில் வீடுகளையும் நாசப்படுத்துகிறது. மனித உயிர்களும் பலியாகின்றன. எனவே வனவிலங்குகள் ஊருக்குள் தண்ணீர் தேடி புகுவதை தடுக்க வனத்துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மலைப்பகுதிகளில் அவ்வப்போது சாரல்  மழை பெய்து வந்தாலும், அவைகளுக்கு முழுமையாக குடிநீர் கிடைக்கவில்லை. வனப்பகுதிகளில் வன விலங்குகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர்  நிரப்ப வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : forest ,Dindigul district ,
× RELATED பற்றியது பயங்கர காட்டுத்தீ புகையில் திணறும் ‘இளவரசி’