×

கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளில் பராமரிப்பு பணி

கொடைக்கானல், ஜூன் 12:தினகரன் செய்தி எதிரொலியால் கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர். கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது. இந்த சாலைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளது. கீழ் குண்டாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்காக குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தும் மூடப்படாமல் விடப்பட்டதால் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துவிட்டன. குழாய் பதிக்கும் பணி தொடங்கி சுமார் ஒரு வருடம் ஆகிய நிலையில் இந்த சாலைகள் அனைத்தும் அப்படியே விடப்பட்டு தினந்தோறும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கிடையே பயணித்து வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் பயணிப்போரும் நாள்தோறும் கீழே விழுந்து விபத்தை சந்தித்து வருகின்றனர். இந்த சாலைகள் அனைத்தையும் நகராட்சி குறைந்தபட்சம் பேட்ச்ஒர்க் செய்து சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் அண்ணா சாலை, நாயுடுபுரம் சாலை, பேருந்து நிலையம் அருகே உள்ள சாலை, ஆனந்தகிரி பகுதியில் உள்ள சாலைகள் அனைத்து சாலைகளும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக மேலும் சேதமடைந்துள்ளது.

இந்த சாலைகள் அனைத்தையும் விரைவில் சீர்செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்த செய்தியை தினகரன் நாளிதழ் நேற்று வெளியிட்டிருந்தது. இதன் எதிரொலியாக நேற்று சாலை சீரமைப்பு பணியை கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் முருகேசன் தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் கூறியதாவது, 10 லட்சம் ரூபாய் செலவில் கொடைக்கானலில் நகராட்சி பகுதியில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைப்பு செய்யப்படும். இந்தப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ஓரிரு வாரங்களுக்குள் இந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டு முடிக்கப்படும். கூடுதல் பணியாளர்களை வைத்து நகராட்சி மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறது என தெரிவித்தார்.

Tags : roads ,municipality ,Kodaikanal ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை