இழப்பீடு தருவதில் இழுபறி பழநி சப்.கலெக்டர் அலுவலகம் மீது நீதிமன்றம் ஜப்தி நடவடிக்கை

பழநி, ஜூன் 12: இழப்பீடு தருவதில் இழுபறியாக இருப்பதால் பழநி சப்.கலெக்டர் அலுவலகம் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சியில் கடந்த 1988ம் ஆண்டு தமிழக அரசால் சித்த மருத்துவக் கல்லூரிக்காக 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 1991ம் ஆண்டு நிலத்தின் உரிமையாளர்களுக்கு சென்ட் ஒன்றிற்கு ரூபாய் 750 இழப்பீடாக வழங்கப்பட்டது. நிலத்தின் உரிமையாளர்கள் கூடுதல் தொகை வழங்கக்கோரி பழநி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 2004ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சென்ட் ஒன்றிற்கு ரூபாய் 4 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் பழநி சார்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதன்படி ரூபாய் 7 கோடி இழப்பீடு தர வேண்டியிருந்தது. இதில் முதற்கட்டமாக ரூபாய் 3.50 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை வழங்கப்படவில்லை. தற்போது வட்டியுடன் ரூபாய் 3.70 கோடி வழங்க வேண்டி இருந்தது. பழநி சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி கணேசன் பழநி சார் ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். நீதிமன்ற அலுவலர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் வரும் 26ம் தேதி சம்மந்தப்பட்ட துறை அதகாரிகளுடன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை 5வது முறையாக கைவிடப்பட்டது.

Tags : Japthi ,Court of Appeal ,Counterterror ,Office ,
× RELATED டிடிவிதினகரனின் அ.ம.மு.க.வை பதிவு செய்ய...