×

நத்தம் பகுதியை கலக்கிய கொள்ளை கும்பல் கைது

நத்தம், ஜூன் 12: நத்தம் பகுதியை கலக்கிய கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், எஸ்.கொடையை பகுதியை சேர்ந்த குமார்(42) என்பவர் நத்தத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் ஒத்தக்கடை பாலம் அருகே நடந்து சென்றார். அவ்வழியாக டூவீலரில் வந்த கும்பல், குமாரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பியது. சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேக்அப்துல்லா, சாந்தா மற்றும் தனிப்படை போலீசார் கும்பலை தேடி வந்தனர்.

இந்த நிலையில், நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்த 6 பேரை மடக்கி சோதனையிட்டனர். சோதனையில் இவர்கள் செல்போன் பறிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நத்தம் பகுதியை சேர்ந்த அஜய்(22), சிவா(22), பெரியசாமி(22), அருள்முருகன்(22) உள்பட 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 30 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : gang ,gangsters ,area ,Natham ,
× RELATED சென்னையில் 4 பேரை வெட்டிய ரவுடி கும்பல் கைது