ஜமீன் நிலங்கள் விவகாரம் கூடலூர் காங்கிரசார் ராகுலிடம் மனு

கூடலூர், ஜூன் 12: கூடலூர் பகுதி ஜமீன் நிலங்களில் வசிக்கும் மக்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் கூடலூர் காங்கிரஸ் கமிட்டியில் மனு அளித்துள்ளனர். வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்திருந்தார். அப்போது வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தியை கூடலூர் காங்கிரஸ் கட்சியின் மண்டல கமிட்டி தலைவர் அஷ்ரப் தலைமையில் நிர்வாகிகள் முகம்மது, விவேக், சம்சுதீன், ராசிது, சித்திக் ஆகியோர் அடங்கிய குழு கூடலூர் பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்து மனு அளித்துள்ளனர். இந்த மனுவில் குறியுள்ளதாவது : கூடலூர் பந்தலூர் பகுதிகளில் பட்டா இல்லாத அரசு நிலங்களான பிரிவு 17 பிரிவு 53 அரசு புறம்போக்கு உள்ளிட்ட நிலங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 5 தலைமுறைக்கும் மேலாக வசிக்கின்றனர்.

1969ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் கீழ் கூடலூர் பகுதியில்  நிலம்பூர் கோவிலகம், நடுவத்தூர் மனை, நெல்லியாளம் ராணி ஆகியோர் வசமிருந்த 80 ஆயிரத்து 80 ஏக்கர் நிலம் அரசுடமை ஆக்கப்பட்டது. அரசுடமை ஆக்கப்படும் முன்பே  இந்த இடங்களில் மக்கள் வசித்து வந்துள்ளனர்.  இதேபோல் இங்கு உள்ள தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்களும் இதில் அடங்குவர்.  இந்த நிலங்களையும் வனமாக மாற்றுவதற்கு வசதியாக கடந்த ஆண்டு தமிழக அரசு புதிய 16 A சட்டத்தை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஜமீன்தார்களிடமிருந்து ஜமீன் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி பட்டா வழங்கும் சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கப்பட்ட இந்த நிலங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. எவ்வித சட்ட நடை முறைகளையும் பின்பற்றாமல் நேரடியாக வனமாக மாற்றுவதற்கு புதிய சட்டத்தை அரசு வரைமுறை செய்துள்ளதால் இந்த நிலங்களில் காலம் காலமாக வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தங்களது பிரச்னைக்கு தீர்வு காணாமல் மக்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்கிறது என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஓவேலி பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறாமல் தடை செய்யப்பட்டு உள்ளது. இங்கு வசிக்கும் மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்கான பொருட்களை கொண்டு செல்வதற்கு கூட வனத்துறை தடை விதித்து வருகிறது.

இதேபோல் பட்டா பாத்தியதை உள்ள நிலங்களையும் தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்து உள்ளது.   இச்சட்டத்திற்கு முரணாக 5 ஏக்கருக்கும் கீழே உள்ள நிலங்களும் உட்படுத்தப்பட்டு உள்ளதால்  ஒரு சென்ட் இரண்டு சென்ட் நிலம் வைத்திருக்கும் ஏழை, எளிய மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.  இப்பகுதி மக்களின் பிரச்னையை மக்களவையில் எழுப்பி மக்களின் அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட ராகுல் காந்தி இப்பிரச்னைகள் தொடர்பாக மக்களவையில் குரல் எழுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில்  கூடலூர் பகுதியில் நேரடியாக மக்களை சந்தித்து குறைகளை கேட்க உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

Tags : Rahul Gandhi ,Jamine ,Congress ,
× RELATED குடியுரிமை சட்டத் திருத்த மசோதா...