×

பருவமழை துவங்கியது ஆபத்தான பகுதிகளை கண்காணிக்க குழு

ஊட்டி, ஜூன் 12: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் 233 அபாயகரமான பகுதிகளை கண்காணிக்க 35 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்த தகவல்களை கட்டுபாட்டு மையங்களுக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டு கொண்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை, அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று ஊட்டியில் நடந்தது. இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், மண்டல குழுக்கள், முன்னெச்சரிக்கை தகவல் அளிக்கும் குழு, தேடுதல், மீட்பு குழு, நிவாரண மையம் மேலாண்மை குழு, அரசு சாரா அமைப்பு குழு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். தென்மேற்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கும், மண்டல அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில், அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க பள்ளிகள், சமுதாய கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம், சுகாதார பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். கோட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மண்டல குழுக்கள், முதல் பொறுப்பாளர்கள், தனியார், தன்னார்வலர்களுக்கு பேரிடர் சமயங்களில் ஆற்ற வேண்டிய பணிகளின் இன்றியமையாமை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் மழைகாலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள 233 பகுதிகளுக்கும் 35 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது மாவட்ட அவசர கால மையத்தில் செயல்பட்டு வரும் கட்டுபாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

இதேபோல் ஆர்.டி.ஒ., அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. கட்டுபாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். இதன்படி ஊட்டி ஆர்.டி.ஒ., அலுவலகம் 0423-2445577, குன்னூர் ஆர்.டி.ஒ., அலுவலகம் 0423-2206002, கூடலூர் ஆர்.டி.ஒ., அலுவலகம் 04262-261295 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஊட்டி வட்டம் 0423-2442433, குன்னூர் வட்டம் 0423-2206102, கோத்தகிரி வட்டம் 04266-271718, குந்தா வட்டம் 0423-2508123, கூடலூர் வட்டம்-04262-261252, பந்தலூர் வட்டம் 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.  இவ்வாறு இன்னசென்ட் திவ்யா கூறினார்.

Tags : areas ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...