×

கோத்தகிரி அருகே பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களை கண்டித்து போராட்டம்

கோத்தகிரி, ஜூன் 12:  கோத்தகிரியில் அடுத்த கரிக்கையூர் கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கோத்திமுக்கு, கொக்கோடு, குள்ளங்கரை, தாளமொக்கை, பாவியூர், மெட்டுக்கல் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இதில் தலைமை ஆசிரியர், 6 ஆசிரியர்கள், 2 சமையலர்கள் பள்ளியில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளி ேநரத்தை கடந்து மிகவும் தாமதமாக ஆசிரியர்களும், சமையலர்களும் சென்றுள்ளனர். உண்டு உறைவிட பள்ளி என்பதால் அங்கு தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் பசியுடன் இருந்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த பெற்றோர்கள், பொதுமக்கள் பள்ளிக்கு விரைந்து சென்று மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்பாமல் பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ததுடன் ஆசிரியர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : teachers ,protest ,school ,Kotagiri ,
× RELATED தொலை தூரத்தில் தேர்தல் பணி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு