ஐம்பை பேரூராட்சியில் குடிநீர் விநியோகிக்க தீவிர நடவடிக்கை

பவானி, ஜூன் 12: ஜம்பை பேரூராட்சிப் பகுதிக்கு பவானி ஆற்றில் தளவாய்பேட்டையில் உள்ள நீர்வடி கிணறுகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நீரேற்றம் செய்யப்பட்டு, 15 வார்டுகளுக்கும் குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றில் குறைவான தண்ணீர் வருதல், நீர்வடிதலில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் குடிநீர் கலங்கலாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதுகுறித்த விரிவான செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதையடுத்து, ஜம்பை பேரூராட்சி அதிகாரிகள் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை களைய உடனடியாக எடுத்தனர். பவானி ஆற்றில் எடுக்கப்படும் தண்ணீரில் முறையாக குளோரின் கலக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டதோடு, குடிநீர் விநியோகிக்க கட்டப்பட்டுள்ள அனைத்து மேல்நிலை தொட்டிகளும் பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. பவானி ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள புதைவடி கிணறுகளில் தண்ணீர் முறையாக வடியும் வகையில் கிணறுகளைச் சுற்றிலும் ேஜசிபி வாகனத்தை கொண்டு மணல் குவிக்கப்பட்டது. மேலும், கிணற்றைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி செல்லுமாறு ஆற்றுக்குள் மணலைக் கொட்டி, வாய்க்கால் போன்று ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜம்பை பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் கணேசமூர்த்தி, உதவிப் பொறியாளர் குமார் மற்றும் ஜம்பை பேருராட்சி குடிநீர் திட்டப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் முன்பு பேரூராட்சி அதிகாரிகள் பரிசோதனை செய்து, தண்ணீரின் தரத்தை உறுதிப்படுத்தினர்.

Tags :
× RELATED வாகன ஓட்டிகள் அவதி பாபநாசத்தி்ல் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு