சின்னவேப்பநத்தத்தில் பல ஆண்டாக பூட்டியே கிடக்கும் கிளை நூலகம்

நாமக்கல், ஜூன் 12: நாமக்கல் அடுத்துள்ள வசந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட சின்னவேப்பநத்தம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் வசதிக்காக, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கடந்த 2009ம் ஆண்டு ₹3.51 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கிளை நூலகம் கட்டப்பட்டது. இந்த கிளை நூலகம் பொது நூலகத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. தினமும் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் திறந்து வைத்திருக்க வேண்டும். மேலும், கிளை நூலகத்தை பராமரிக்க ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு, அவருக்கு ₹1,500 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நூலகம் சில மாதங்கள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. அதன் பின்பு தற்போது வரை பூட்டியே கிடக்கிறது. ஆனால், நூலகத்தை பராமரிப்பவருக்கு மட்டும், மாதந்தோறம் சம்பளம் வழங்கப்படுவதாக தெரிகிறது. இந்த நூலத்தில் உள்ள புத்தகங்களின் நிலை குறித்தும் தெரியவில்லை. மின் கட்டணம் செலுத்தாததால், பல மாதங்களுக்கு முன்பே மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், நூலக கட்டிடத்தின் சுற்றுச்சுவரும் இடிந்துள்ளது. இரவு நேரத்தில் சமூக விரோத கும்பல் ஆக்கிரமித்து மது அருந்துவது, சீட்டு விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிளை நூலகத்தை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். மேலும்,  நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் இதே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 25 நூலகங்கள் செயல்பாட்டில் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நாமக்கல் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, சின்னவேப்பநத்தம் கிராமத்தில் உள்ள கிளை நூலகம் மூடி வைக்கப்பட்டுள்ளது குறித்து, அங்கு பணியமர்த்தப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார்.

× RELATED பொய்யப்பட்டியில் கிளை நூலகத்தை விரிவுபடுத்த கோரிக்கை