செட்டிச்சிபாளையத்தில் கோழிப்பண்ணைகளால் ஈ தொல்லை அதிகரிப்பு

நாமக்கல், ஜூன் 12: நாமக்கல் அடுத்துள்ள செட்டிச்சிபாளையத்தில் கோழிப்பண்ணைகளால் ஈ தொல்லை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் அருகே செட்டிச்சிப்பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் மற்றும் நெசவுத்தொழில் பிரதானமாக உள்ளது. பெரும்பாலான மக்கள் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும், கோழிப்பண்ணை தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, கறிக்கோழி வளர்க்கப்படுகிறது. ஆனால், பண்ணைகளை சுகாதாரமாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சுகாதாரமற்ற பண்ணைகளில் ஈக்கள் பெருகியுள்ளது. இந்த ஈக்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். நாள்முழுவதும் வீட்டின் ஜன்னல், கதவுகளை மூடியே வைத்திருக்க வேண்டியுள்ளது. திறந்த நிலையில் வைத்துள்ள தண்ணீரில் ஈக்கள் விழுந்து இறந்து கிடக்கிறது. இதனால், குடிநீரை பயன்படுத்த முடிவதில்லை. காய்கறி, உணவு பண்டங்களில் ஈக்கள் மெய்ப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்நடை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் கோழிப்பண்ணைகளில் ஆய்வு செய்து, முறையாக பராமரிக்கவும், ஈக்களின் தொல்லையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED நடுவனப்பள்ளி கிராமத்தில் கோழிப்பண்ணை கழிவால் நோய் பரவும் அபாயம்