×

சேலம் போலீஸ் சரகத்தில் 126 எஸ்ஐக்கள் இடமாற்றம்

சேலம், ஜூன் 12: நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வந்த போலீஸ் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர்களை மண்டலங்களுக்கும், எஸ்ஐக்களை சரகங்களுக்கும் அப்போது மாற்றம் செய்தனர். கடந்த மாதம் 26ம் தேதியோடு தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டதால், மீண்டும் தாங்கள் பணியாற்றிய மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் விருப்ப மனுக்களை கொடுத்தனர்.

இதன்பேரில், இடமாறுதல் உத்தரவு வழங்குவது பற்றி மண்டல அளவில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவை மேற்கு மண்டலத்தில், தற்போது சரகம் மற்றும் மாவட்ட வாரியாக இடமாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் போலீஸ் சரகத்தில் உள்ள சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 126 எஸ்ஐக்களுக்கு இடமாறுதல் வழங்கி, டிஐஜி செந்தில்குமார் நேற்று உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் பணியாற்றிய எஸ்ஐக்கள் புவனேஸ்வரி, சங்கீதா, கலையரசி, ரம்யா உள்ளிட்ட 59 பேர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர்.

அந்த 3 மாவட்டங்களில் பணியாற்றி வந்த எஸ்ஐக்கள் வான்மதி, ஆனந்தகுமார், தங்கவேல், செல்வலட்சுமி, ராணி, மல்லிகா உள்ளிட்ட 48 பேர், சேலம் மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல், 4 மாவட்டத்திலும் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த எஸ்ஐக்கள் 19 பேர் மாற்றப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிருநாளில் கோவை மேற்கு மண்டலம் முழுவதும் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்ற உத்தரவு வெளிவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Salem ,
× RELATED தள்ளாத வயதிலும் கவனம் ஈர்த்த தலையாய...