×

ஓசூர் தொழிலாளி வெட்டிக்கொலை தனிப்படை பெங்களூரு விரைந்தது

ஓசூர், ஜூன் 12: ஓசூரில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகள் பெங்களூருவில் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே லிங்காபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணப்பா மகன் மகேஷ்குமார்(35). பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்த இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 4.12.2018 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே லக்கசந்திரம் என்னுமிடத்தில், விஜி என்பவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மகேஷ்குமாரை, கர்நாடக மாநிலம் ஆடுகோடி போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, ஜாமீனில் வந்த மகேஷ்குமார், சொந்த ஊரில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை 6 மணியளவில், 9ம் வகுப்பு படித்து வரும் தனது மகனை, பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பாகலூர் அருகே பேரிகை சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்த கார், திடீரென அவரது பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை, காரில் இருந்து இறங்கிய 4 பேர், வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக, விஜி தரப்பைச் சேர்ந்த ரவுடி கும்பல் மகேஷ்குமாரை தீர்த்து கட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்புடைய குற்றவாளிகள் பெங்களூருவில் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், இக்கொலை குறித்து விசாாித்து வரும் பாகலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் நேற்று பெங்களூரு விரைந்தனர். அங்கு கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தனிப்படை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Bangalore ,hosiery worker ,
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...