×

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 12: கிருஷ்ணகிரியில் உழவர் தின விவசாயிகள் பேரணி மற்றும் விடுதலை மாநாடு குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், வரும் ஜூலை 5ம் தேதி ஈரோட்டில், உழவர் தின விவசாயிகள் பேரணி மற்றும் முழுமையான கடன் விடுதலை மாநாடு நடைபெறுகிறது. மாநாடு குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமரெட்டி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சென்னையநாயுடு, டிராக்டர் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொல் வலது மற்றும் இடதுபுற கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரு மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். கோதாவரி -காவிரி நதிகளை தென்பெண்ணை ஆற்றுடன் இணைத்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட மா, தென்னை மரத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு விலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் நடக்கும் மாநாட்டிற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆயிரம் விவசாயிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Farmers consultation meeting ,Krishnagiri ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்