×

தில்லைவிளாகம் பட்டிவாய்க்கால் தடுப்பணை உடைந்து கடல்நீர் கிராமத்திற்குள் புகுந்தது

முத்துப்பேட்டை, ஜூன் 12: முத்துப்பேட்டையை அடுத்த தில்லை விளாகம் பட்டிவாய்க்கால் தடுப்பணை சேதமானதால் கடல்நீர் கிராமத்திற்குள் புகுந்தது. இதனால் தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் தெற்குக்காடு மற்றும் சுற்றுபகுதிக்கு மிகப்பெரிய பாசன வசதியை பெற்று தரும் வகையில் அங்கு பட்டிவாய்க்கால் உள்ளது. இந்த பட்டிவாய்க்கால் வீரன்வயல் கிராமத்திலிருந்து பாமணி ஆற்றிலிருந்து பிரிந்து தில்லைவிளாகம் தெற்குக்காடு கடல் முகத்துவாரம் வரை சென்று கடலில் கலக்கும் வகையில் சுமார்12கிமீ தூரம் இந்த வாய்க்கால் சென்றடைகிறது. இந்த வாய்க்கால் மூலம் வீரன்வயல், கழுவங் காடு, தில்லைவிளாகம், அரமங்காடு, செங்காங்காடு, துறைத்தோப்பு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடி நிலத்திற்கு பாசனத்தை பெற்று தருகிறது.

விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பிரித்து எடுத்து பயன்படுத்தினாலும் திறந்து விடப்படும் தண்ணீர்கடலில் கலந்து வீணாகாமல் இருக்கவும் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் சமாளிக்க தண்ணீரை சேமிக்கும் வகையில் தெற்குக்காடு கிராம கடைசி எல்லையான நீர்ப்பரப்பு திடல் அருகே சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை ஒன்று உள்ளது. அதே போன்று மறுபுறம் செங்காங்காடு கிராமத்தில் உள்ள சாகுபடி நிலத்திற்கும் அதேபோல் இருபுறம் உள்ள சுமார்300ஏக்கர் மொசவெளி இடத்திற்கு நீராதாரத்தையும் பெற்று தருகிறது.

அதே நேரத்தில் கடலில் இருந்து கடல்நீர் கிராமங்களுக்கு புகாமலும் நிலத்தடிநீர் உப்புநீர் கலக்காமலும் இருக்க இந்த தடுப்பணை மிகப்பெரிய பயனுள்ளதாக இப்பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பட்டிவாய்க்கால் தடுப்பணையில் அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளா ததால் தற்பொழுது தடுப்பணை சேதமாகி எந்நேரத்திலும் பல்வேறு பாகங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் இதுநாள் வரை சீரமைக்காததால் தடுப்பணை மோசமாகி வருகிறது. இதில் கஜா புயலுக்கு வீழ்ந்த இந்த தடுப்பணையை அப்பகுதி கிராம மக்களால் மணல் மூட்டைகள் அடுக்கி சமாளித்து வந்தனர். ஆனாலும் தற்பொழுது முத்துப்பேட்டை பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடுமையான காற்று அதன் மூலம் கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்ந்து இந்த பட்டிவாய்க்காலில் சேதமாகி உள்ள தடுப்பணையை தாண்டி சுமார்10கிமீ தூரம் அளவில் கிராமத்துக்குள் செல்கிறது. இதன் மூலம் அப்பகுதி நிலத்தடி நீர் உப்புநீராக மாறியுள்ளது.

இதில் சற்று தொலைவில் உள்ள பூமிக்கு அடியிலிருந்து குடிக்க பயன்படுத்த எடுக்கப்படும் குடிநீர்டேங்குடன் கூடிய குடிநீர் சம்புவில் தண்ணீர்உப்பு நீராக மாறி மக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் விரைவிலேயே இந்த சேதமான தடுப்பணையை இடித்து விட்டு கட்ட வேண்டும் அல்லது தண்ணீர்வருவதற்குள்ளாவது இதே தடுப்பணையை சீரமைக்க வேண்டும். இதன் மூலம் தற்பொழுது கடல் நீர்உட்புகுவது தடுக்கப்படும் வர இருக்கும் தண்ணீரை சேமிக்கவும் பயனாக இருக்கும். இதனை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்முருகையன் கூறுகையில்: இன்னும் சில நாட்களில் மேட்டூர்அணை திறந்து விடப்படும் சூழலில் இந்த தடுப்பணையை சீரமைத்தால் இப்பகுதி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதிகாரிகள் முன் வரவேண்டும் என்றார். விவசாயி நாடிமுத்து கூறுகையில்: சாகுபடிக்கு தட்டுப்பாடு இல்லாமல் இந்த தடுப்பணையில் சேமிக்கும் நீர்பயனாக இருந்தது. சில ஆண்டுகளாக இந்த தடுப்பணை சேதமாகி விட்டதால் தண்ணீரை சேமித்து வைக்க முடியாதளவில் கடலில் சென்று விடுகிறது. இது போன்று தட்டுப்பாடு உள்ள நேரத்தில் தண்ணீருக்கு திண்டாடும் சூழல் இப்பகுதி விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்றார்.

விவசாயி கணேசன் கூறுகையில்: இந்த பட்டிவாய்க்கால் தனியார்ஆக்கிரமிப்பால் அகலமாக இருந்த இந்த வாய்க்கால் சிறியளவில் சுருங்கி விட்டது. சேதமான இந்த தடுப்பணையை போர்க்கால அடிப்படியில் உடன் இடித்துவிட்டு புதியதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ரமேஷ் கூறுகையில்: மக்கள் நலன் கருதி கடல்நீர்கிராமத்திற்கு உள்ளே புகாத வகையில் இந்த தடுப்பணையை சீரமைக்க அரசு முன்வரவேண்டும் என்றார்.

Tags : Thillai Valiyam ,Patti Kokku ,seaside village ,
× RELATED விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி பல்வேறு படிப்புகளில் சேர்ந்து