×

திருமக்கோட்டை அருகே மகாராஜபுரத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதிதாக கட்டிதரப்படுமா?

மன்னார்குடி, ஜூன் 12: திருமக்கோட்டை அருகே மகாராஜபுரம் கிராமத்தில் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு புதிதாய் கட்டி தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் திருமக்கோட்டைக்கு அருகில் உள்ள மகாராஜபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை கருதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஒன்று மகாராஜபுரம் மெயின் ரோட்டில் ஊரா ட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டது.

அப்போது கட்டப்பட்ட நீர்நிலை தொட்டி கட்டுமானம் தரமானதாக இல்லாத தாலும், உள்ளாட்சி நிர்வாகத்தின் போதிய பராமரிப்பு இல்லாததாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை முற்றிலும் இடித்து விட்டு புதிதாய் கட்டித்தர வேண்டும் என்று அப்போது கிராம மக்கள் கோரிக்கை வைத்தும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மக்களின் கோரிக்கைகளை வழக்கம் போல் புறம் தள்ளி விட்டு தற்காலிக ஏற்பாடாக ரூ 30 ஆயிரம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகளை மட்டும் மேற் கொண்டது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டு காலமாக மகாராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் சிமென்ட் காரைகள் எல்லாம் பெயர்ந்து தொட்டி பலமிழந்து எந்நேரமும் இடிந்து விழும் சூழலில் உள்ளது. மீண்டும் தொட்டியை புதிதாய் கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், கோட்டூர் யூனியன் அலுவலகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மகாராஜபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சத்தியமூர்த்தி கூறியது,
எங்கள் கிராமத்தில் 350 க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. முறையான குடிநீர் விநியோகமும் செய்யப் படுவதில்லை.

மெயின் ரோட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலமாக தான் எங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த தொட்டியோ சிமென்ட் காரைகள் எல்லாம் பெயர்ந்து இரும்பு கம்பிகள் எல்லாம் வெளியே தெரிகிற நிலையில் எந்நேரமும் குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கும், கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற் கும் பலமுறை எடுத்துக்கூறியும் பலனில்லை. பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் அந்த தொட்டியின் வழியே தான் சென்று வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே அதிகாரிகள் சிதிலமடைந்த தொட்டியை நேரில் பார்வையிட்டு அதனை முற்றிலும் அகற்றி விட்டு புதிதாய் கட்டித்தர வேண்டும் என்று கூறினார்.

Tags : Thirumkottai ,Maharastra ,
× RELATED மஹாரஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில்...