×

கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் சஸ்பெண்ட் கண்டித்து செவிலியர்கள் போராட்டம்

கரூர், ஜூன் 12: கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 4 செவிலியர்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 140 செவிலியர்கள் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கூடுதல் பணிச்சுமை மற்றும் டீனின் தன்னிச்சையான போக்கு ஆகியவற்றை கண்டித்து செவிலியர்கள் கடந்த 5ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்தினார், இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க மாநில துணைத்தலைவர் நல்லம்மாள், மாவட்ட தலைவர் கார்த்தி, செயலாளர் செல்வராணி, பொருளாளர் தனலட்சுமி ஆகிய 4 பேரை டீன் ரோஸிவெண்ணிலா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதனை கண்டித்து நேற்று பிற்பகல் செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். டிஎஸ்பி கும்மராஜா, இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். எங்களது கூடுதல் பணிச்சுமை மற்றும் குறைகளை கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்., ஆர்டிஓ விசாரணை நடத்தி வரும் நிலையில் தன்னிச்சையாக பழிவாங்கும் நோக்கத்தோடு டீன் 4 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். கோரிக்கையை கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். நோயாளிகளின் நலன் பாதிக்கின்ற அளவுக்கு நாங்கள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. டீனை மாற்றுவது தான் எங்களது கோரிக்கை. மற்ற கோரிக்கைகள் அதற்கு அடுத்துத்தான் என்றனர்.

பின்னர் சிறிதுநேரத்தில் டீன் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். செவிலியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் மகாவிஷ்ணு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். டீனின் தன்னிச்சையான போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. டீனை மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பின்னர் மாலை முதல் தொடர்ந்து அங்கேயே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு விடிய விடிய அங்கேயே அமர்ந்து இருந்தனர். இப்பிரச்னையில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்று பிற துறை ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Tags : hospital ,nurses ,Karur Medical College ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...