×

கரூரில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

கரூர், ஜூன் 12: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு கோரிக்கைள் சம்பந்தமாக 2712 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்களின் முகாம் மனுக்கள், மக்களை தேடி வருவாய்த்துறை திட்டம் மூலம் பெறப்படும் மனுக்கள், மக்கள் குறைதீர் மனுக்கள் ஆகியவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையிலும், அனைவரும் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும், கரூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட துணி பைகளை மக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு வந்த பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கிய மாவட்ட கலெக்டர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் லீலாவதி, கலால்துறை உதவி ஆணையர் மீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,Karur ,meeting meeting ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்