×

மணமங்கலம் தாலுகா அலுவலக இ சேவை மையத்தில் சான்றிதழ்கள் தெளிவின்றி வழங்கும் அவல நிலை நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூர், ஜூன் 12: மண்மங்கலம் தாலுகா அலுவலக இ சேவை மையத்தில் சான்றிதழ்களை தெளிவின்றி வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் அச்சமாபுரம் பகுதியை சேர்ந்த சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: மண்மங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் அரசு சார்பில் இ சேவை மையம் செயல்படுகிறது. இந்த மையம் மூலம் வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரி சான்று போன்ற பல்வேறு சான்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 6 மாதங்களாக வழங்கப்பட்டு வரும் சான்றுகள், பிரிண்டிங் சரியில்லாமலும், தெளிவு இல்லாமலும் உள்ளது. பழைய டோனரை பயன்படுத்துவதால் சான்றுகள் தெளிவு இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக, இந்த சான்றுகளை பள்ளி மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் பயன்படுத்திட முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தனியார் சென்டருக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த சேவை மையத்துக்கு சரியான மூலப்பொருட்கள் வழங்கி பள்ளி மாணவ, மாணவிகள் பயனடைய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதே போல் லாலாப்பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி, நாகராஜ் என்பவர் கொடுத்த மனுவில், கரூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் திண்டுக்கல், வெள்ளியணை, பாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் மார்க்கத்தில் பயணிகள் நலன் கருதி நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்ப்புற பகுதியில் நிழற்குடை உள்ளது. இதே போல் திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் பஸ் நிறுத்தம் அருகே நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் குப்பம், புன்னம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தாங்கள் அனைவரும் இந்த பகுதியில் விவசாயம் செய்து வசித்து வருகிறோம். இந்நிலையில், விவசாய நிலத்தையொட்டிய பகுதியில் உயர் கோபுர டிரான்ஸ்பார்மர் (மின் மோடார்) அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாக கேள்விப்படுகிறோம். இதனால் பல்வேறு பாதிப்புகளும், விவசாயமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : Manuhamangalam ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...