×

பொன்னமராவதி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாழடைந்து கிடக்கும் அலுவலர் குடியிருப்பு வீடுகள் புதுப்பிக்க, புதிதாக கட்ட அலுவலர்கள் எதிர்பார்ப்பு

பொன்னமராவதி, ஜூன் 12: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாழடைந்து கிடக்கும் அலுவலர் குடியிருப்பு வீடுகளை புதுப்பிக்க வேண்டும் அல்லது இடித்து அகற்றி புதிதாக கட்ட வேண்டும் என அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மேற்கு பகுதியில் அலுவலர்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டு வேளாண்துறை அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் குடியிருந்து வந்தனர். இந்த குடியிருப்பு வீடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் பல ஆண்டுகளாக இடிந்து சேதமடைந்தது. இதனால் இந்த குடியிருப்பில் யாரும் குடியிருக்கவில்லை. இந்த பகுதியில் இப்போது வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த குடியிருப்பை சுற்றி அரசு அலுவலகங்கள் உள்ளன.

இங்கு பணிபுரியும் அலுவலர்கள் நீண்ட தூரத்தில் இருந்து வந்து பணிபுரிந்து செல்கின்றனர். பலர் அதிக வாடகை கொடுத்து குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளை சரி செய்தால் இங்கு பணிபுரியும் அலுவலர்கள் குடியிருக்க வசதியாக இருக்கும். இங்கு 20க்கும் மேற்பட்ட வீடுகள் பாழடைந்து கிடக்கின்றது. இந்த அலுவலர்கள் குடியிருப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டவேண்டும் அல்லது இந்த வீடுகளை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும் என்பதே அலுவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Staff Officers ,office premises ,Ponnaravarathi Union ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...