×

பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகள் இலவசமாக சொட்டுநீர் பாசன கருவி அமைக்கலாம்

செந்துறை, ஜூன் 12: செந்துறை வட்டாரம் வஞ்சினபுரம் கிராத்தில் கூட்டு பண்ணையம் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ் வேளாண்மைத்துறை மற்றும் கிரீடு வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கூட்டு பண்ணைய பயிற்சி முகாம் நடந்தது. அதில் வரும் காரிப்பருவத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் ஒரே நேரத்தில் சாகுபடி மேற்கொள்ள வேண்டும். கோடை உழவு செய்து ராணுவ படைபுழுவின் கூண்டு புழுக்களை கட்டுப்படுத்த வேண்டும். விதைப்பு செய்யும்போது 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவில் இட வேண்டும். விதையை விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விதைப்பின்போது ஊடுபயிராக தட்டைப்பயறு, உளுந்து, சாமந்தி, எள் வரப்பு பயிராக ஆமணக்கு போன்ற பயிர்களை பயிர் செய்து நன்மை செய்யும் பூச்சிகளை கொண்டு கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. விதைத்த 10 நாட்களுக்குள் மெட்டாரைசியம் அனிசோபிலி 800 கிராம், 200 லிட்டர் நீரில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிப்பு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 எண்கள் இனகவர்ச்சி பொறிகொண்டு ஆண் பூச்சிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி பூச்சிகளை அழிக்கலாம். பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாக சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் கருவிகள் அமைத்து சிக்கனமாக நீரை பயன்படுத்தி அதிக அளவில் பயிர் செய்திட எடுத்துரைக்கப்பட்டது.

பயிற்சியில் கிரீடு வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் திருமலைராஜன் மற்றும் அரியலூர் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ், செந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜன், துணை வேளாண்மை அலுவலர் அப்பாவு, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் சிவா, உதவி வேளாண்மை அலுவலர்கள் மலர்கொடி, ஆனந்தி பங்கேற்றனர்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது