×

குழந்தைகளை தொழில்களில் ஈடுபடுத்தினால் கடும் தண்டனை

நாகை, ஜூன் 12: குழந்தை மற்றும் வளரினம் பருவத்தினரை தொழில்களில் ஈடுபடுத்தினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார். நாகை சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நேற்று தொடங்கியது. கலெக்டர் சுரேஷ்குமார் பேரணியை தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே அவுரித்திடலில் பேரணி நிறைவுபெற்றது. இதில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம். குழந்தைகள் உங்கள் எதிர்காலம். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்போம். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

இதை தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான உறுதிமொழி கையெழுத்து போடப்பட்டது. இதை தொடர்ந்து கலெக்டர் சுரேஷ்குமார் கூறியதாவது: நாகை மாவட்டத்தில் உள்ள கடைகள், ஓட்டல்கள், தானியங்கி பணிமனைகள், இருசக்கர வாகன பணிமனைகள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்காக குழந்தை தொழிலாளர் தடுப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு, வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை அலுவலர்கள் ஆகியோர் இருப்பார்கள். இந்த குழுவினர் திடீரென தரையோர கடைகள் உட்பட அனைத்து கடைகளிலும் ஆய்வு நடத்துவார்கள்.

அப்பொழுது குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரையும் கட்டாயம் கல்வி கற்ற வேண்டும். 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு நிறுவனத்திலும் பணியில் அமர்த்த கூடாது. 15 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை அதாவது வளரினம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடாது. அவ்வாறு ஈடுபடுத்துவோர்கள் மீது ரூ.50 ஆயிரம் மற்றும் 2 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டத்தை இரண்டாம் முறை மீறும் பெற்றோர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். நாகை மாவட்டத்தில் இதுவரை 3 குழந்தைகள் கொத்தடிமைகளாக இருந்தது மீட்கப்பட்டுள்ளனர் என்றார். தொழிலாளர் நல உதவி ஆணையர் தர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், தாசில்தார் சங்கர், நாகை டிஎஸ்பி (பயிற்சி) அர்ச்சனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Children ,businesses ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்