புதுவையில் தீக்குளிக்க முயன்ற கடலூர் ஆசிரியர்

புதுச்சேரி, ஜூன் 12:   விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (52). கடலூரில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். தனது உடல் நிலையை காரணம் கூறி திண்டிவனத்தில் இயங்கும் நிதியுதவி பள்ளிக்கு இடமாறுதல் கேட்டுள்ளார். அதற்கு அவரது பதவி உயர்வை கருத்தில் கொண்டு புதுச்சேரி- கடலூர் மறைமாவட்ட நிர்வாகம் தரப்பில் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று காலை புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பிஷப் ஆபீசுக்கு வந்த ஆசிரியர் புஷ்பராஜ், தனக்கு பணியிட மாறுதல் வேண்டுமென அங்கிருந்த பாதிரியார்களிடம் முறையிட்டுள்ளார். அதற்கு சில காரணங்களை கூறி அவர்கள் மறுத்த நிலையில், பிஷப்பை சந்திக்க சென்ற அவர், திடீரென தான் கொண்டு வந்த பாட்டிலை எடுத்து மிரட்டும் வகையில் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாராம். இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள், அவரை தடுத்து வெளியே அழைத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது பற்றி பெரியகடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார், தீக்குளிக்க முயன்ற ஆசிரியரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக மறைமாவட்ட நிர்வாகத்திடம் விசாரித்து புகாரை பெற்ற போலீசார், ஆசிரியர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பிஷப் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : teacher ,Cuddalore ,New Delhi ,
× RELATED ஏனாமில் 13 ஆயிரம் மக்களை வெளியேற்ற கவர்னர் உத்தரவு