×

திண்டிவனம் அருகே தண்ணீர் பஞ்சம் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

திண்டிவனம், ஜூன் 12: திண்டிவனம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம்  முழுவதும் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக அதிக வெப்பத்தின் காரணமாக  பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைகண்டித்து  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட  பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி  வருகின்றனர். தண்ணீர் பிரச் னையை தீர்க்க நடவடிக்கை  எடுக்காத தமிழக அரசை கண்டித்துதிண்டிவனம் அடுத்த ஏப்பாக்கம்  கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் திண்டிவனம்-ஆவணிப்பூர் சாலை நொளம்பூரில்  டீசல் கேன் மற்றும் காலி குடங்களுடன்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் இரண்டு மணி  நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இப்பிரச்னை குறித்து தகவல் அறிந்து வந்த ஒலக்கூர் போலீசார்  மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம்  தொடர்ந்து பல மணி நேரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் தங்கள் ஊரில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூடப்பட்டுவிட்டதால் மீண்டும் அதே இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க முயன்று வருவதாகவும், ஆனால் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய விவசாய நிலத்தில் நீர்  ஆதாரம் பாதிக்கப்படும் என்று கூறி ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு  தெரிவிப்பதால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு இரண்டு  மாதத்திற்கும் மேலாக குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் இது குறித்து ஒலக்கூர் வட்டார  வளர்ச்சி அலுவலகத்தில் பி.டி.ஓ.ராமதாசிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித  நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.மேலும் சாலை மறியலை கைவிட மறுத்து பல மணி நேரமாக ஊரக வளர்ச்சி துறை  அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர்  தகவலறிந்து வந்த விழுப்புரம் மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் ஜோதி, வட்டார  வளர்ச்சி அலுவலர் முருகன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன்  உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஒலக்கூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட  பொதுமக்களிடம் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக  எடுப்பதாக உறுதி அளித்தனர்.
தொடர்ந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்திற்கு  சென்று பார்த்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்பிறகும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை.  பின்னர் பொதுமக்கள் கேட்ட இடத்திலேயே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள்  போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில்
பரபரப்பு ஏற்பட்டது.

Tags : water rush ,Tindivanam ,roads ,
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...