வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீர் கடலூர் நகராட்சியில் சுகாதார சீர்கேடு

கடலூர், ஜூன் 12: மாவட்டத்தின் தலைநகராக உள்ள கடலூரில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 46 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. சுமார் 150க்கும் மேற்பட்ட நகரங்கள் உள்ளன. தற்போது பெருநகராட்சி அந்தஸ்தில் உள்ளது. விரைவில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் கடலூர் எந்த ஒரு துறை ரீதியிலும் வளர்ச்சி பெறாமல் பெரிய கிராமம் என்ற அளவிலேயே உள்ளது. குறிப்பாக சுகாதாரத்தை எடுத்துக்கொண்டால் மிக மோசமான நிலையில் உள்ளது. எங்கு திரும்பினாலும் குப்பை மேடுகளாகவும், வாய்க்கால்களில் கழிவுநீர் தேங்கியும் காட்சி அளிக்கிறது.

கடலூர் நகரில் பெரும் பகுதி திறந்தவெளி சாக்கடையாக உள்ளது. கழிவு நீர் வாய்க்கால்கள் சாலைகளை விட சற்று உயரத்தில் அமைக்காததால் சாலைகளிலிருந்து மணல், குப்பைகள் அனைத்தும் வாய்க்கால்களில் கழிவுநீரோடு கலந்து அடைப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும் பலர் குப்பைகளையும், பிளாஸ்டிக் மற்றும் ஆபத்தான கழிவுகளையும் கழிவுநீர் வாய்க்கால்களில் கொட்டுகின்றனர். மேலும் பெரும்பாலான வீடுகளில் செப்டிக் டேங்க் கழிவுநீரும் இதில் கலக்கிறது. இதுபோல் வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் கழிவுநீரும் வாய்க்கால்களில் திறந்து விடப்படுகிறது. சிப்காட் தொழிற்சாலை டேங்கர் லாரிகள் யாருமற்ற இடங்களில் ரசாயன கழிவுகளை வாய்க்கால்களில் கொட்டிவிட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

இவற்றின் காரணமாக சுமார் 200 கி.மீ நீளத்திற்கு பழைய வடிகால் வாய்க்கால்களில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. நிலத்தடி நீரும் மாசுபட்டு வருகிறது.கடலூரில் 60 சதவீதம் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக பெரும் சுகாதார சீர்கேட்டை எதிர்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மருதவாணன் கூறுகையில், திறந்தவெளி கழிவுநீர் வாய்க்கால்கள் அனைத்தும் மூடப்பட வேண்டுமென அம்ருத் திட்டம் கூறுகிறது. கோண்டூர் பகுதியில் பெரும் போராட்டத்திற்கு பின்னர் திறந்தவெளி கழிவுநீர் வாய்க்கால் மேலே சிலாப்கள் போட்டு மூடப்பட்டது. கடலூர் நகராட்சியில் கழிவுநீர் மேலாண்மைக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை. விஞ்ஞான பூர்வமாக திட்டமிட்டு கடலூர் பெருநகராட்சி பகுதிகளில் 200 கி.மீ நீளத்திற்கு ஓடாமல் தேங்கி நிற்கும் கழிவுநீர் ஓடச்செய்ய வேண்டும். கடலூரில் கம்பன்நகர், எம்.ஜி.ஆர் நகர், டெலிபோன் காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் கழிவுநீர் வாய்க்காலிலேயே குடிநீர் குழாயும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்புள்ளது.கடலூர் நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீர் விஷமாக மாறி தொற்றுநோய்களின் பிறப்பிடமாக மாறி வருகிறது. எனவே உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : municipality ,Cuddalore ,
× RELATED சுருக்குமடி வலை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் ரத்து