×

விருத்தாசலத்தில் பரபரப்பு மின் மோட்டார்களை பறிமுதல் செய்த நகராட்சி ஊழியர்களிடம் மக்கள் வாக்குவாதம்

விருத்தாசலம், ஜூன் 12: விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு  பூதாமூர் பகுதியில் திரவுபதியம்மன் கோயில் தெரு, ஈவெரா தெரு, பாரதி தெரு,  வள்ளலார் தெரு, காந்தி தெரு, திருவள்ளுவர் தெரு, புதுத்தெரு உள்ளிட்ட  தெருக்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து  வருகின்றனர். பூதாமூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து  நகராட்சி மூலம் இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.  பூதாமூரில் உள்ள பகுதி மிகவும் மேடான பகுதி என்பதால், குடிநீர் குழாய்களில்  நீரேற்றம் செய்ய முடியாமல் குடிநீர் சரிவர கிடைக்காமல் இருந்து  வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பலர் வீடுகளில் மின் மோட்டார் வைத்து  குடிநீரை எடுத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை அப்பகுதிக்கு சென்று அனுமதியின்றி பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். அப்போது 6 வீடுகளில் மின் மோட்டார்களை  பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அடுத்த வீடுகளில்  மின் மோட்டார்களை எடுக்க செல்லும் போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எங்கள் பகுதி மேடான பகுதி  என்பதால் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் கடுமையான குடிநீர்  பஞ்சத்தில் இருந்து வருகிறோம். இதுபோன்று மின் மோட்டாரை வைத்து எடுத்தால்  தான் எங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. அதனால் எங்கள் பகுதியில் மின்  மோட்டார்களை அகற்றக் கூடாது. பறிமுதல் செய்யப்பட்ட மின் மோட்டார்களையும்  எங்களிடம் திருப்பித் தரவேண்டும் எனக் கூறி நகராட்சியினரின் வாகனத்தை  சிறைபிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து  தகவலறிந்து வந்த நகராட்சி மேலாளர் அசோக்குமார், நகராட்சி பொறியாளர் பாண்டு,  விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ், ஆதி மற்றும் போலீசார்  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்  பேரில் செய்யப்பட்ட ஆய்வு என்பதால் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள மின்  மோட்டார்களை எக்காரணத்தைக் கொண்டும் திருப்பித் தர இயலாது. போதிய அளவு  குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில்  அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால்  அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம்
பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Vriddhachalam ,
× RELATED கள்ள ஓட்டு போட முயற்சி பாஜ...