×

பண்ருட்டி அருகே தரமின்றி கட்டப்பட்ட ஏரி மதகுகள்

பண்ருட்டி, ஜூன் 12: பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி குறைந்தது 100 ஏக்கர் பாசன வசதி அளிக்கும் வகையில் உள்ளது. மிகுந்த நீர்பிடிப்பு பகுதியான இந்த ஏரியை விவசாயிகள் பெரிதும் நம்பி உள்ளனர். கடந்த சில ஆண்டிற்கு முன்பு அதிகளவு ஆக்கிரமிப்புகள், முட்புதர்கள் இருந்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் ஏரி தூர்வாரப்பட்டது. பின்னர் தமிழக முதல்வர் அறிவித்த ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்றன. அப்போது ஏரியின் அருகில் உள்ள மதகுகள் புதிதாக அமைத்தபோது பின் வழியாக தண்ணீர் செல்ல  வாய்க்கால் அமைக்கப்படவில்லை. இதனால் மழை காலத்தில் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதேபோல் இரண்டாவது மதகில் ஒறையூர் வழியாக மணப்பத்தூர் வாணியம்பாளையம் செல்லும் துணை வாய்க்கால்கள் காணவில்லை. கட்டப்பட்ட மதகுகளின் கட்டிடங்கள் சரியாக, தரமானதாக கட்டப்படாததால் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மதகு அருகிலேயே கரை ஒரத்தில் குறிப்பிட்ட அளவில் கருங்கல் வைத்து சிமெண்ட் கலவைகள் பூசுவது வழக்கம். ஆனால் ஓப்பிற்காக பூசப்பட்டு உள்ளது.
 இதேநிலை நீடித்தால் மழை காலத்தில் அனைத்து மதகுகளும் உடைந்து தண்ணீர் ஊரில் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஒரு ஏரியில் மட்டுமே இந்தஅளவு குறைபாடுகள் உள்ளநிலையில் மற்ற ஏரிகளின் நிலை சொல்லவே தேவையில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நீர்நிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரடி ஆய்வு செய்து தரமாக கட்டப்படாத மதகுகளை தரம் வாய்ந்ததாக கட்டி நீரை தேக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : lake lakes ,Panruti ,
× RELATED காங்கிரஸ் வேட்பாளர் காரில் சோதனை