×

தடுப்புச்சுவரில் பைக் மோதி வாலிபர் பலி நெடுஞ்சாலை துறையை கண்டித்து மக்கள் திடீர் மறியல்

விருத்தாசலம், ஜூன் 12: விருத்தாசலம் அருகே சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதியதில் வாலிபர் பலியானதையடுத்து அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து பரங்கிப்பேட்டை வரை செல்லும் நெடுஞ்சாலை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விரிவாக்கப் பணிக்காக சாலைகளை தோண்டி பல இடங்களில் பாலங்கள், தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் மந்தகதியில் நடப்பதால் அப்பகுதியில் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கோபாலபுரத்தை சேர்ந்த காண்டீபன் மகன் அருண்குமார் (28) என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். மேலும் அவருக்கு திருமணம் முடிப்பதற்காக பெண் பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு அவர் தனது பைக்கில் விருத்தாசலம்-சிதம்பரம் நெடுஞ்சாலையில் கோபாலபுரம் அருகே சு.கீணனூர் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்புச்சுவரில் பைக் மோதி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை கோபாலபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை நெடுஞ்சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர் எனக் கூறி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து இறந்து போன அருண்குமார் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, கம்மாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் திருச்செல்வம் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் எந்த முடிவும் எட்டப்படாமல் பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக விருத்தாசலம்-சிதம்பரம் நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : highway ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!