×

கோவில்பட்டி தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்

கோவில்பட்டி, ஜூன் 12: கோவில்பட்டி தாலுகாவில் கிராம வருவாய் தீர்வாயம் கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி நேற்று (11ம் தேதி) முதல் துவங்கியது. கோவில்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று (11ம் தேதி) துவங்கியது. கோவில்பட்டி கோட்டாட்சியரும், வருவாய் தீர்வாய அலுவலருமான அமுதா ஜமாபந்தியை நடத்தினார். இந்த ஜமாபந்தியில் கழுகுமலை பிர்க்காவிற்கு உட்பட்ட ஜமீன்தேவர்குளம், கே.வெங்கடேஸ்வரபுரம், கழுகுமலை, வில்லிசேரி-1, வில்லிசேரி-2, இடைசெவல்-1,2 ஆகிய கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்குகளை ஆர்.டி.ஓ.அமுதா சரிபார்த்தார். ஜமாபந்தியின்போது பட்டா மாறுதல் கேட்டு 52 மனுக்களும், மாதாந்திர உதவித்தொகை கேட்டு 16 மனுக்களும், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 4 மனுக்களும் மற்றும் இதர மனுக்கள் 5 என மொத்தம் 77 குறைகேட்பு மனுக்களை கிராம மக்கள் ஆர்டி.ஓ.அமுதாவிடம் அளித்தனர்.

தாசில்தார் பரமசிவன், தலைமையிடத்து துணை தாசில்தார் ராமகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் சுரேஷ், தேர்தல் துணை தாசில்தார் சரவணபெருமாள், வருவாய் ஆய்வாளர் தினகரன் மற்றும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இன்று (12ம் தேதி) இதே பிர்க்காவிற்கு உட்பட்ட நாலாட்டின்புதூர், முடுக்குமீண்டான்பட்டி, தோணுகால், மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, இளையரசனேந்தல் பிர்க்காவிற்கு உட்பட்ட முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது. இந்த ஜமாபந்தி வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது.

Tags : Jamapanti ,Kovilpatti Taluka ,
× RELATED வாலாஜாபாத் ஜமாபந்தியில் 76 பேருக்கு நலத்திட்ட உதவிகள்