×

காமநாயக்கன்பட்டி பரலோகமாதா ஆலய ரத வீதிகளில் தார்சாலை

தூத்துக்குடி, ஜூன் 12: காமநாயக்கன்பட்டி புனித பரலோகமாதா ஆலய தேரோடும்  ரத வீதிகளில் புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கயத்தாறு தாலுகா, காமநாயக்கன்பட்டியில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 5  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித பரலோக மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும்  ஆகஸ்ட் 15ம் தேதி ஆலயத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் உள்ளூர், வெளியூர்  மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று செல்கின்றனர்.

ஆனால், தேரோடும் ரத வீதிகள் அனைத்தும் முறையான பராமரிப்பின்றி முற்றிலும் சேதடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டன. நடந்துசெல்வோர் கூட சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதையடுத்து இதை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து  காமநாயக்கன்பட்டி நாடார் மகமை சங்கத் தலைவர் அந்தோணிராஜ், கூட்டுறவு வங்கி  தலைவர் ஜோக்கியம் மரியவியாகப்பன்  தலைமையில் ஊர் பொதுமக்கள் தூத்துக்குடி  கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், ரத வீதிகளில் புதியதாக தார் சாலை அமைக்க கோரி ஊர்  பொதுமக்கள் சார்பில் ஏற்கனவே கடந்த ஆண்டு மனு  கொடுத்தோம். இதையடுத்து ரூ.18.40 லட்சம் ஒதுக்கீட்டில் ரத வீதிகளில் புதிதாக தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக  ஊராட்சி உதவி இயக்குநரிடம் இருந்து உடனடியாக பதில்  அளிக்கப்பட்டது. ஆனால், இவ்வாறு பதிலளித்து பல மாதங்கள் கடந்தும் இதுவரை  ரத வீதிகளில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவே இல்லை. இதனிடையே கடந்த ஆண்டுகளை  காட்டிலும் ரத வீதிகள் தற்போது மிகவும் சேதமடைந்துள்ளதால் நடப்பாண்டு தேரோட்டத்தை  நடத்துவது என்பது மிகவும் சிரமத்திற்குரியது. எனவே, இந்தாண்டு திருவிழாவுக்கு முன்னதாக ரத வீதிகளில் புதிதாக தார் சாலை அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags : Thalassery ,streets ,Kamanaickenpatti Paramekamada Temple ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...