×

பல்லாங்குழியான புதுப்பட்டி-அச்சங்குளம் சாலை கிராம மக்கள் நூதன போராட்டம்

விளாத்திகுளம், ஜூன் 12: விளாத்திகுளம் அடுத்துள்ள நாகலாபுரம் அருகே போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலைக்கு மலர் வளையம் வைத்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நெடுஞ்சாலை உட்கோட்டம் புதுப்பட்டி -அச்சங்குளம் - அயன்வடமலாபுரம் சாலை உள்ளது. சுமார் 6 கி.மீ நீளமுள்ள இந்த சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு எந்த பராமரிப்பு பணியும் செய்யாமல் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சி அளிக்கிறது. புதுப்பட்டி, அச்சங்குளம், அயன்வடமலாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையை கடந்து தான் நாகலாபுரம், புதூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய உள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் நாகலாபுரத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி மற்றும் உமறுப் புலவர் பாலிடெக்னிக், விளாத்திகுளம் அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த வழியாக தான் சென்று வருகின்றனர். இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதை காரணம் காட்டி அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆட்டோவிற்கு சுமார் 200 ரூபாய் கொடுத்து தான் மற்ற பகுதிகளுக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாகலாபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த பெண் ஒருவர்  தவறி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பல்லாங்குழியான புதுப்பட்டி - அச்சங்குளம் சாலையில் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி  கரிசல்பூமி விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் தலைமையில் சாலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தினர்.

Tags : Puthuppatti Puthupatti-Achankulam Road Rural People ,
× RELATED கோவில்பட்டியில் மினிவேனில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 6 பேர் கைது