×

தாமரைப்பாக்கத்தில் கிடப்பில் மாநகர பஸ் பணிமனை பணி

ஊத்துக்கோட்டை, ஜூன் 12: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட மாநகர பஸ் பணிமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் விவசாயிகள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் இந்த ஊரைச் சுற்றி அமணம்பாக்கம், புன்னப்பாக்கம் பாகல்மேடு, செம்பேடு, கொமக்கன்பேடு சேத்துப்பாக்கம், மாகரல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த  மக்கள் தாமரைப்பாக்கம் கூட்டு சாலைக்கு வந்து, அங்கிருந்து திருவள்ளூர், செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி, வேலை சம்மந்தமாக செல்வார்கள்.

இதற்காக இந்த பகுதி மக்கள் விழுப்புரம் கோட்ட பஸ்களிலும், மாநகர பஸ்களிலும் செல்வார்கள். ஆனால் விழுப்புரம் கோட்ட  பஸ்கள் போதிய அளவுக்கு இல்லை. ஆவடி, திருவள்ளூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மாநகர பஸ்களும் போதிய அளவு  இல்லை. இதனால் தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் மாநகர பஸ் பணிமனை மற்றும் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தாமரைப்பாக்கம் அருகில் அமணம்பாக்கம் கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள   இடத்தில் மாநகர பஸ் பணிமனை மற்றும் மாநகர பஸ் நிலையம் அமைக்கப்படும் என  அறிவித்தார்.

அதன் பேரில் போக்குவரத்து கழக  அதிகாரிகள் அந்த இடத்தை  ஆய்வு செய்து  ஐந்தரை  ஏக்கர் நிலம்  ஒதுக்கீடு செய்து பெயர் பலகை வைத்து விட்டு சென்றனர்.   அதன் பிறகு அதை யாரும்  கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், இடம் ஒதுக்கி 6 ஆண்டுகள் ஆகியும் பணிமனை மற்றும் பஸ் நிலைய பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தி  அப்பகுதி வியாபாரிகள் கடந்த ஜனவரி மாதம்  கடையடைப்பு போராட்டமும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Municipal Bus Workshop ,
× RELATED தையூர் கிராமத்தில் மாநகர பேருந்து...