×

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் நிலத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் கட்டிடத்தை பக்தர்கள் விடுதியாக மாற்ற வலியுறுத்தல்

திருக்கழுக்குன்றம், ஜூன் 12: திருக்கழுக்குன்றத்தில் செயல்பட்டு தற்போது மூடிக் கிடக்கும் தமிழ்நாடு ஓட்டல் கட்டிடம், சமூக விரோதிகளின் கூடராமாக மாறி வருகிறது. இதை, பக்தர்களின் விடுதியாக மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். திருக்கழுக்குன்றத்தில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட தமிழ்நாடு ஓட்டல், வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், அந்த இடம் மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து அந்த கட்டிடம் செயல்படாமல், மூடியே கிடக்கிறது. இதனால், இந்த கட்டிடம், குடிமகன்களுக்கு இலவச பாராகவும், சூதாட்ட கிளப்பாகவும், காதல் ஜோடிகளுக்கு பூங்காவாகவும் மாறி வருகிறது. மேலும் சிலர், பல்வேறு சமூக விரோத செயல்களும் இங்கு நடத்துகின்றனர்.
இந்த கட்டிடத்தை சீரமைத்து ஓட்டலாகவோ அல்லது வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு விடுதியாகவோ மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தமிழக சுற்றுலாத்துறை சார்பில் மாநிலத்தின் முக்கிய நகர் பகுதிகளில் தமிழ்நாடு ஓட்டல் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் திருக்கழுக்குன்றம் பஸ் நிலையத்துக்கு அருகே தமிழ்நாடு ஓட்டல் தொடங்கப்பட்டது. சில ஆண்டுகள் மட்டும் செயல்பட்ட அந்த ஓட்டல், 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்காமல் அப்படியே பாழடைந்து கிடக்கிறது. இதனால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது.முக்கிய கோயில் நகரமான திருக்கழுக்குன்றத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் கட்டிடத்தை சீரமைத்து, வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான விடுதியாக மாற்றினால், பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

Tags : Tamilnadu ,hotel building ,Vedicakiriswarar ,
× RELATED 450 கோடி முறை பெண்கள் இலவச பஸ் பயணம்:...