×

அத்தி வரதர் உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு

காஞ்சிபுரம், ஜூன் 12: 40 ஆண்டுகளுக்கு பின், வரதராஜ பெருமாள் குளத்தில் இருந்து வெளியேறும் அத்தி வரதர் நிகழ்வை காணவரும் பக்தர்களுக்கு, தேவையான வசதிகள் செய்து தருவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பொன்னையா, எஸ்பி சந்தோஷ் ஹதிமானி முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்தர ரெட்டி, இணை ஆணையர் செந்தில் வேலன், சப் கலெக்டர் சரவணன், உதவி ஆணையர் ரமணி, காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில், அத்தி வரதர் சயன கோலத்தில் இருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு பின் வரும் ஜூலை 1ம் தேதி அத்தி வரதர், பூமிக்கடியில் இருந்து வெளியில் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

குளத்தில் இருந்து வெளியே வந்ததும், கோயில் வளாகத்தில், 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதில், முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் எழுந்தருள்வார். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் நீரில் மூழ்கி உள்ள அனந்த சரஸ் குளம், கோயில் வளாகம் மற்றும்  வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ள செட்டித் தெரு பகுதியில் இருந்து அதிகாரிகள் நடந்து வந்து சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, சாலையை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியதாவது. அத்தி வரதரை காண வரும் பக்தர்களுக்கு வசதியாக புறநதகர் பகுதியில் 3 தற்காலிக பஸ் நிலையங்களும், சிறியளவில் 4 தற்காலிக பஸ் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. அத்தி வரதர் உற்சவத்துக்காக தமிழக அரசு சார்பில் ₹ 2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் எந்த சிரமமுமின்றி மூலவர் வழிபாடு செய்ய அனைத்து முன்னேற்பாடு பணிகள் செய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் மின்விளக்கு வசதிகள், 100 இடங்களில் தற்காலிக கழிப்பிடங்கள், 9 தற்காலிக மருத்துவமனைகள், 12 ஆம்புலன்ஸ்கள், 9 தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் தயார் நிலையில் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் 2100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியில் இருந்து, நகரத்தில் சிறிய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதிகள் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது, மாவட்டவருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, திட்ட அலுவலர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் மகேந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : Minister of Surveyorate ,Varatharajah Perumal Temple ,
× RELATED மயிலாடுதுறை அருகே அழைக்காமல் நடந்த...