×

மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் நிதியின்றி தவிக்கும் காஞ்சிபுரம் விளையாட்டு வீரர்

காஞ்சிபுரம், ஜூன் 12: காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் சுகனேஷ் (22). மாற்றுத் திறனாளி. இவரது தந்தை மகேந்திரன், அண்ணன் நவமணி. ஆட்டோ டிரைவர்கள். மாற்றுத் திறனாளியான சுகனேஷ், தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் தேர்வாகி தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார்.  டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு ஆட்ட நாயகன், தொடர் நாயகன் உள்பட பல சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

இதுவரை பல இடங்களில் நடந்த போட்டிகளில் உறவினர்கள், நண்பர்கள் அளித்த பண உதவியால் சென்று வந்துள்ளார். மேலும் கடந்த டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் குஜராத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். இதைதொடர்ந்து டிசம்பர் 9ம் தேதி இந்தியா  - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் துணைக் கேப்டனாகவும் சுகனேஷ் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக் கோப்பை போட்டியில் விளையாட உள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், இந்த போட்டியில் கலந்துகொள்வதற்கு நிதியின்றி தவிக்கிறார். இதனால் அரசு சார்பிலோ, தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலோ நிதியுதவி அளித்து தொடர்ந்து அவர் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : sportsman ,Kanchipuram ,recipient ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...