×

காட்டரம்பாக்கம் ஏரியில் அனுமதியின்றி இயங்கும் மண் குவாரி

ஸ்ரீபெரும்புதூர், ஜூன் 12: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்டரம்பாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த 3 மாதங்களாக போலீசார், பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் அனுமதியுடன் சட்டவிரோதமாக மண் குவாரி செயல்படுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் அருகில் காட்டரம்பாக்கம் ஊராட்சியின், கட்டுப்பாட்டில் பொதுப்பணித்துறை ஏரி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காட்டரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக இந்த ஏரி இருந்தது.

தற்போது இருங்காட்டுக்கோட்டை, காட்டரம்பாக்கம், கீவளூர் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்பட்டு ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இதனால் மேற்கண்ட 3 பகுதிகளில் விவசாயம் செய்யப்படாமல் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் காட்டரம்பாக்கம் ஏரியில் தூர்வாரி சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக இந்த ஏரியில் இருந்து மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டது. டெண்டர் முடிந்த பிறகு தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், காட்டரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சிலர், இந்த ஏரியில் அனுமதியின்றி மண் குவாரி அமைத்து, ஏரியின் அருகில் தனியார் தொழிற்சாலை கட்டுமான பணிக்கு ஏரி மண்ணை விற்பனை செய்து வருகின்றனர். இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை காட்டரம்பாக்கம் ஏரியில் 10 பொக்லைன் இயந்திரம் மூலம் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் எடுக்கின்றனர்.

காட்டரம்பாக்கம் ஏரியில் இருந்து திருட்டு மண் எடுத்து தனியார் தொழிற்சாலைகளின் கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்வவதாக, மேற்கண்ட பகுதி விவசாயிகள், பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார், பொதுப்பணித்துறை பொறியாளர், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் ஆகியோருக்கு பலமுறை தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் யாரும் அங்கு சென்று ஆய்வு செய்யவோ, புகார் மீது நடவடிக்கை எடுக்கவோ மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், போலீசாரின் உதவியுடனும், பாதுகாப்புடனும் ஏரியில் இருந்து மண் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே காட்டரம்பாக்கம் ஏரியில் அனுமதியின்றி மண் குவாரி அமைத்து திருட்டு மண் எடுக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : Soil quarry ,lake ,
× RELATED தேக்கடி ஏரியை நீந்தி கடந்த புலி படகு சவாரியில் பார்த்து ரசித்தனர்