கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பயங்கரம் தந்தையை அடித்துக்கொன்று சடலம் புதைப்பு: காணாமல் போனதாக நாடகமாடிய மகன் தற்கொலை முயற்சி

சித்தூர், ஜூன் 12: கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தந்தையை அடித்துக்கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய அவரது மகனும் தற்கொலைக்கு முயன்றார். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடா கிராமிய மண்டலம், பர்மா காலனியை சேர்ந்தவர் கோபிரெட்டி(55), விவசாயி. இவரது மனைவி லட்சுமி(50). இவர்களுக்கு 4 மகள்கள். இதனால் கோபிரெட்டி, தனது தங்கை மகனான குமார்(21) என்பவரை சிறுவயதில் இருந்து தத்தெடுத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோபிரெட்டி, குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 17ம்தேதி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கோபிரெட்டி, குமாரை கத்தியால் வெட்ட முயன்றாராம். அப்போது குமார் அருகில் இருந்த கட்டையால் கோபிரெட்டியை தாக்கியதில், கோபிரெட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அதிர்ச்சியடைந்த லட்சுமி, குமாரை போலீசார் கைது செய்து விடுவார்களே என பயந்தார். இதனால் லட்சுமி, குமார் இருவரும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் கோபிரெட்டியின் சடலத்தை வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்தனராம். பின்னர் லட்சுமி, அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் ‘எனது கணவர் என்னிடம் சண்டைபோட்டுவிட்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார்'' எனக்கூறினாராம். இந்நிலையில் கடந்த 9ம் தேதி குமார் மற்றும் அவருடைய சித்தப்பா ராமு ஆகியோர் ஒன்றாக மது குடித்தனர். அப்போது குமாருக்கு போதை அதிகமான நிலையில், தந்தையை அடித்துக்கொன்றுவிட்டு, தாயுடன் சேர்ந்து சடலத்தை புதைத்துவிட்டோம் என கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராமு, இதுகுறித்து திம்மாபுரம் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், குமார் வீட்டிற்கு சென்று அங்கு புதைக்கப்பட்டிருந்த கோபிரெட்டியின் சடலத்தை வெளியே எடுத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையறிந்ததும் குமார், போலீசாருக்கு பயந்து விஷம் குடித்தார். போலீசார் அவரை மீட்டு, சிகிச்சைக்காக காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள லட்சுமியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags : suicide attack ,
× RELATED ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற...