×

சிங்கபெருமாள் கோயில் அருகே அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பார் கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்

செங்கல்பட்டு, ஜூன் 12: சிங்கபெருமாள் கோயில் அருகே அனுமதியில்லாமல் செயல்பட்ட 3 டாஸ்மாக் பார் கட்டிடங்களை, அதிகாரிகள் அதிரடியாக இடித்து தள்ளினர். இதனால், செங்கல்பட்டு அருகே பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் பார்களை இரவு முழுவதும் இயக்குவதற்காகவும் அனுமதி இல்லாத பார்களை நடத்துவதற்கு போலீசார் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்பதாகவும் கூறி, கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லையப்பன் என்ற பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி, மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்புராஜ், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரை பணி இடமாற்றம்
செய்தனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் பார்களை கடந்த 2 வாரமாக வருவாய்த்துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அனுமதியில்லாமல் செயல்படும் அனைத்து பார்களையும் மூட வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனாலும் பெரும்பாலான இடங்களில் பார்களில், அனுமதியின்றி இரவு மற்றும் அதிகாலையில் நேரங்களில் மதுவிற்பனை தொடர்ந்தது.

இந்நிலையில் கலெக்டர் பொன்னையா, அனுமதியின்றி செயல்படும் அனைத்து பார்களையும் அகற்ற வருவாய்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, மாவட்டம் முழுவதும் வருவாய்துறை அதிகாரிகள், பார் அமைந்துள்ள கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி, செங்கல்பட்டு தாசில்தார் சங்கர் தலைமையில் வருவாய் துறை ஆய்வாளர்கள், அலுவலர்கள், சிங்கப்பெருமாள் கோயில், கோவிந்தாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகையில், அனுமதியில்லாமல் செயல்படும் பார்களை, அவர்களே மூட வேண்டும் என உத்தரவிட்டோம். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை பார்களை அகற்றவில்லை. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து பார்களையும் இடித்து தள்ள, மாவட்ட நிர்வகாம் உத்தரவிட்டது. அதன்பேரில், செங்கல்பட்டு தாலுகாவில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, 28 பார்கள் உரிமம் இல்லாமல் செயல்படுவது தெரிந்தது.முறைப்படி, அகற்றுவதற்கு அறிவுறுத்தியும், அதை பார் உரிமையாளர்கள் மதிக்கவில்லை. இதனால், தற்போது 3 பார்களின் கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டள. இன்னும் ஒரு வாரத்தில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து பார்களும் அகற்றப்படும் என்றனர்.

பதுக்கி வைத்து விற்பனை

மாவட்டம் முழுவதும் அனுமதி இல்லாத டாஸ்மாக் பார்கள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற அனைத்து பார்களையும், அதன் உரிமையாளர்களே அகற்ற வேண்டும். அதேபோல், டாஸ்மாக் ஊழியர்கள் துணையுடன், கிராமங்களில் ஒருசிலர் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். அதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Tags : buildings ,Singaperumal Temple ,
× RELATED வார விடுமுறை முடிந்து சென்னை...