×

திருவண்ணாமலை அருகே குடிநீர் வழங்ககோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் சமரசம்

திருவண்ணாமலை, ஜூன் 12: திருவண்ணாமலை அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். திருவண்ணாமலை அடுத்த வடஅரசம்பட்டு கிராமத்தில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில், ஆழ்துளை கிணற்றில் இருந்த மின் மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால், மின் மோட்டாரை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் வடஅரசம்பட்டு கிராமத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த திருவண்ணாமலை பிடிஓக்கள் பழனி, பிரகாஷ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் பழுதடைந்த மின்மோட்டாரை உடனடியாக சீரமைத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : road traffic authorities ,drinking water supply centers ,Thiruvannamalai ,
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...